12–ம் வகுப்பு தேர்வு முடிவு தமிழ் பாடத்தில் 372 மாணவர்கள் தேர்ச்சி


12–ம் வகுப்பு தேர்வு முடிவு தமிழ் பாடத்தில் 372 மாணவர்கள் தேர்ச்சி
x
தினத்தந்தி 30 May 2017 10:31 PM GMT (Updated: 2017-05-31T04:00:59+05:30)

12–ம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடத்தில் 372 மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

மும்பை,

மராட்டியத்தில் எச்.எஸ்.சி. தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகின. மாநிலம் முழுவதும் 89.50 சதவீதம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி அடைந்தனர். அறிவியல், கலை, வணிகவியல் உள்பட பல்வேறு பிரிவுகளில் உள்ள மொத்தம் 162 பாடங்களில் அந்தந்த பிரிவு மாணவ, மாணவியர் தேர்வு எழுதி இருந்தனர்.

மொழிப்பாட அளவில் பார்த்தால் அதிகபட்சமாக ஆங்கிலத்தில் 13 லட்சத்து 27 ஆயிரத்து 115 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மராட்டி பாடத்தில் 8 லட்சத்து 70 ஆயிரத்து 669 பேரும், இந்தியில் 3 லட்சத்து 50 ஆயிரத்து 775 பேரும், குஜராத்தியில் 2 ஆயிரத்து 646 பேரும், உருதுவில் 39 ஆயிரத்து 716 பேரும், கன்னடத்தில் 1,636 பேரும், சிந்தியில் 2 ஆயிரத்து 627 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

தமிழ் பாடத்தில்....

தமிழ் பாட தேர்வை 387 மாணவ, மாணவியர் எழுதி இருந்தனர். இவர்களில் 372 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இது 96.12 சதவீத தேர்ச்சி ஆகும். இவர்கள் அனைவரும் மராட்டிய கல்வி வாரியத்தின் மும்பை மண்டலத்தில் தேர்வு எழுதியவர்கள் ஆவர்.

மலையாள பாட தேர்வு 12 பேர் எழுதி இருந்தனர். இவர்கள் அனைவரும் தேர்ச்சி அடைந்தனர். சமஸ்கிருதத்தில் 16 ஆயிரத்து 633 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இயற்பியல் பாடத்தில் 3 லட்சத்து 32 ஆயிரத்து 593 மாணவ, மாணவியர் தேர்ச்சி அடைந்துள்ளனர். வேதியியல் பாடத்தில் 5 லட்சத்து 44 ஆயிரத்து 113 பேரும், உயிரியலில் 4 லட்சத்து 23 ஆயிரத்து 400 பேரும் தேர்ச்சி அடைந்து உள்ளனர்.


Next Story