மத்தூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு பள்ளி ஆசிரியை காதல் கணவருடன் தஞ்சம்
மத்தூர் போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு பள்ளி ஆசிரியை, தனது காதல் கணவருடன் தஞ்சம் அடைந்தார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள கவுண்டனூரை சேர்ந்தவர் சேகர். இவருடைய மகள் அனிதா (வயது 25). இவர் மத்தூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். கவுண்டனூரை அடுத்த கோடிபதி கிராமத்தை சேர்ந்தவர் திருப்பதி (வயது 29). அனிதா தினமும் வேலைக்கு செல்லும் போது திருப்பதியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.
இதுகுறித்து அவர்களுடைய பெற்றோருக்கு தெரியவந்தது. காதல் ஜோடி இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் அனிதாவும், திருப்பதியும் வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தனர். இதையடுத்து அவர்களை மத்தூர் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
பெற்றோர் கதறல்இதைத் தொடர்ந்து மத்தூர் போலீசார் இருவருடைய பெற்றோர்களையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது காதலனை பிரிந்து தங்களுடன் வருமாறு அனிதாவின் பெற்றோர் கண்ணீர் மல்க கூறி, கதறி அழுதனர். ஆனாலும் அனிதா தனது பெற்றோருடன் செல்ல மறுத்து, காதல் கணவருடன் தான் செல்வேன் என கூறினார்.
இதையடுத்து அனிதாவின் பெற்றோரை போலீசார் அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பின்னர் அவர்கள் அழுதுகொண்டே அங்கிருந்து சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தால் மத்தூர் போலீஸ் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.