மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு


மாணவ-மாணவிகளுக்கு கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு
x
தினத்தந்தி 21 Jun 2017 10:00 PM GMT (Updated: 2017-06-22T01:02:28+05:30)

மாணவ-மாணவிகளுக்கு வசதியாக கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாக கலெக்டர் தெரிவித்தார்.

விருதுநகர்,

குழந்தைகள் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக்குழு, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்புக்குழு கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தொடர்ந்து ஏற்படுத்தப்பட்டு வருகிறது. ரெயில் நிலையங்களில் சுற்றித்திரியும் குழந்தைகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. உடல்நிலை சரியில்லாத மாணவ, மாணவிகளை பள்ளி விளையாட்டு போட்டிகளில் சேருவதற்கு கட்டாயப்படுத்தக்கூடாது. எச்.ஐ.வி. நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை பள்ளியில் சேர்க்க எவ்வித மறுப்பும் தெரிவிக்கக்கூடாது. மேலும், அக்குழந்தையின் நோய் தன்மை குறித்து சக மாணவரிடத்திலோ, ஆசிரியர்களிடத்திலோ தெரிவிக்க கூடாது. பள்ளிக்கு செல்லும் நேரங்களில் மாணவ-மாணவிகள் சிரமமின்றி பயணம் செய்ய கூடுதல் பஸ்கள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நடவடிக்கை

விபத்துகளை தவிர்க்க பள்ளிகளின் அருகே வேகத்தடை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், குழந்தைகளை சட்டத்திற்கு புறம்பாக தத்து வழங்குதல், தத்து எடுத்தலை தவிர்க்கும் பொருட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி குழந்தைகளை சட்டத்திற்கு புறம்பாக தத்து வழங்குதல், தத்து எடுத்தல் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அரசு மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன குழந்தைகள் இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளுக்கு மாதாந்திர மருத்துவ உதவிகள் மேற்கொள்ள சுகாதாரத்துறையின் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொது மக்கள் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பல்வேறு புகார்களை 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசியில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமரன், குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் நரசிம்மன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் பழனிச்சாமி, இளைஞர் நீதிக்குழு உறுப்பினர் மெர்சி அன்னபூரணி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் பத்மாசனி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story