ரூ.2¼ கோடி தங்கத்துடன் தலைமறைவான நகைக்கடை ஊழியர் கைது


ரூ.2¼ கோடி தங்கத்துடன் தலைமறைவான நகைக்கடை ஊழியர் கைது
x
தினத்தந்தி 26 Jun 2017 9:05 PM GMT (Updated: 2017-06-27T02:34:56+05:30)

ரூ.2¼ கோடி மதிப்புள்ள தங்கத்துடன் தலைமறைவான நகைக்கடை ஊழியரும், உடந்தையாக இருந்த அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்.

மும்பை,

ரூ.2¼ கோடி மதிப்புள்ள தங்கத்துடன் தலைமறைவான நகைக்கடை ஊழியரும், உடந்தையாக இருந்த அவரது நண்பரும் கைது செய்யப்பட்டனர்.

மும்பை கல்பாதேவி பகுதியில் நகைக்கடை நடத்தி வருபவர் காந்திலால் ஜைன். ஐதராபாத்தில் உள்ள வியாபாரி ஒருவரிடம் இருந்து ரூ.2 கோடியே 24 லட்சம் மதிப்புள்ள 7 கிலோ 500 கிராம் எடை கொண்ட தங்கத்தை வாங்கி வரும்படி கடை ஊழியர் மனோகர்சிங் என்பவரை கடந்த மாதம் அனுப்பி வைத்திருந்தார்.

தங்கத்தை வாங்கிக்கொண்டு சொகுசு பஸ்சில் மும்பை திரும்பிய அவர், காந்திவிலி பகுதியில் பஸ் வந்த போது மர்மஆசாமி ஒருவர் தனக்கு மயக்க மருந்து கலந்த பிஸ்கட்டை சாப்பிட கொடுத்துவிட்டு தங்கத்தை அபேஸ் செய்துவிட்டதாக காந்திலால் ஜைனுக்கு போன் செய்து அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.

இதைக்கேட்டு பதறிப்போன அவர் உடனே போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுக்கும்படி அவரிடம் கூறினார். ஆனால் மனோகர் சிங் புகார் கொடுக்காமல் தலைமறைவாகி விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த காந்திலால் ஜைன் அவர் மீது சம்தாநகர் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை வலைவீசி தேடிவந்தனர். இந்தநிலையில் அவர் போரிவிலியில் தலைமறைவாக இருப்பது தெரியவந்தது.

போலீசார் அங்கு சென்று அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். விசாரணையில், தனது நண்பர் நாராயண்சிங் என்பவர் உதவியுடன் இந்த கொள்ளை நாடகத்தை அரங்கேற்றியதாக தெரிவித்தார். அவர் கொடுத்த தகவலின்பேரில் போலீசார் நாராயண்சிங்கையும் கைது செய்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்த ரூ.1 கோடியே 90 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். மீதமுள்ள தங்கத்தை அவர்கள் என்ன செய்தார்கள் என்பது தெரியவில்லை. அவற்றையும் பறிமுதல் செய்ய போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.Next Story