எடப்பாடி பழனிசாமி அரசு ஊழல் நிறைந்ததாக இருக்கிறது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு


எடப்பாடி பழனிசாமி அரசு ஊழல் நிறைந்ததாக இருக்கிறது ஓ.பன்னீர்செல்வம் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 Aug 2017 4:45 AM IST (Updated: 4 Aug 2017 12:34 AM IST)
t-max-icont-min-icon

எடப்பாடி பழனிசாமி அரசு ஊழல் நிறைந்ததாக இருக்கிறது என்று கோவையில் ஓ.பன்னீர்செல்வம் குற்றம் சாட்டினார்.

கோவை,

ஈரோடு மாவட்டம் ஓடாநிலையில் நடந்த தீரன் சின்னமலை நினைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் அ.தி.மு.க. புரட்சித்தலைவி அம்மா அணி சார்பில் வரவேற்பு கொடுக்கப்பட்டது. விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த ஓ.பன்னீர்செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

அ.தி.மு.க.வில் உள்ள இரு அணிகள் இணைப்பு தொடர்பாக நாங்கள் ஏற்கனவே எங்களுடைய நிலைப்பாட்டை தெளிவாக தெரிவித்து விட்டோம். அந்த அணியில் இருப்பவர்கள் அவர்களாகவே கேள்விகள் கேட்டும், அவர்களாகவே பதிலையும் சொல்லி வருகிறார்கள். அதற்கு நாங்கள் எவ்விதத்திலும் பொறுப்பு ஆகமாட்டோம்.

நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சொல்லி வருகிறோம். எம்.ஜி.ஆர். தொடங்கிய இந்த இயக்கத்தை ஜெயலலிதா கட்டிக்காத்து வந்தார். அது மக்கள் இயக்கமாகதான் வளர்ந்தது. இன்றும் மக்கள் இயக்கமாக தான் இருக்கிறது. அது எங்கள் பக்கம்தான் உள்ளது.

டி.டி.வி.தினகரன் வெளியே வந்த பின்னர், தற்போது நடந்து வரும் நிலைமைகளை நாங்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறோம். டி.டி.வி.தினகரன் கட்சி அலுவலகத்துக்கு சென்ற பின்னர் என்ன நடக்கிறது என்பதை கவனித்து அதன் பின்னர் எங்களின் கருத்தை தெரிவிப்போம்.

குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்த ஓட்டலில் வருமான வரித்துறை சோதனை நடந்து உள்ளது. அதுபோன்று தமிழகத்தில் உள்ள கூவத்தூரில் எம்.எல்.ஏ.க்கள் தங்கி இருந்தபோது வருமான வரித்துறை ஆய்வு நடத்தி இருக்க வேண்டும் என்பது எங்களின் ஆழமான கருத்து.

தமிழக பாடத்திட்டம் நீட் தேர்வுக்கு முழுமையாக மாற்றப்பட்ட பின்னர்தான் இந்த தேர்வில் தமிழக மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற முடியும். தேர்வில் மாணவர்கள் தேர்ச்சி அடையலாம். ஆனால் கலந்தாய்வில் கலந்து கொண்டு மருத்துவ கல்லூரியில் இடம் கிடைப்பது குதிரை கொம்பாகதான் இருக்கும்.

ஏனென்றால் தமிழக மாணவர்கள் படிக்கும் பாடத்திட்டம் வேறு, நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்வி கள் வேறு. எனவே நமது பாடத்திட்டத்தை மாற்றிய பின்னர், அந்த வாய்ப்பு தமிழக மாணவர்களுக்கு முழுமையாக கிடைக்கப்பட்ட பின்னர், நீட் தேர்வு நடத்தப்பட்டால் கிராமப்புற மாணவர்கள் அதிகள வில் டாக்டர்களாக வாய்ப்பு கிடைக்கும். எனவே நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது எங்களின் கருத்து.

தமிழகத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரனால் ஏற்படுத்தப்பட்ட ஆட்சிதான் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சி. அவர்கள் உண்மையில், ஆழமான மனதுடன் தான் சசிகலா, டி.டி.வி.தின கரனை கட்சியைவிட்டு வெளியே வைக்க நினைக்கிறார்களா? என்பது மக்களுக்கு புரியவில்லை. அதை பொறுப்பில் இருக்கும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெளிவாக தெரிவிக்க வேண்டும்.

கூவத்தூரில் 122 எம்.எல்.ஏ.க்களை அடைத்து வைத்து கட்டாயப்படுத்தப்பட்டதால் ஆதரவு அளித்தனர் என்பது அனைவருக்கும் தெரியும். அவர்கள் பக்கம் 122 எம்.எல்.ஏ.க்களும், 2,417 நிர்வாகிகளும் தான் உள்ளனர். ஆனால் எங்கள் பக்கம் தமிழக மக்கள் உள்ளனர். அ.தி.மு.க. எந்த நோக்கத்துக்கு உருவாக்கப்பட்டதோ, அந்த கொள்கைப்படி, மக்களாட்சி தத்துவத்தின்படி, மக்கள் இயக் கத்தின்படி, மக்கள் ஆட்சியாக தான் அ.தி.மு.க. இருக்க வேண்டும் என்பது எங்களின் அடிப்படை கொள்கை.

டி.டி.வி.தினகரன் மற்றும் சசிகலா குடும்பத்துக்கு மட்டும் அ.தி.மு.க. சொந்தம் இல்லை. அ.தி.மு.க. எந்த ஒரு குடும்பத்தின் இரும்பு பிடியிலும் சிக்காமல், ஜனநாயக முறைப்படி நடக்க வேண்டும் என்பது தான் எங்களின் கொள்கை.

தமிழக அமைச்சர் விஜயபாஸ்கர் சொத்துக்கள் முடக்கப்பட்டது, இலாகா ரீதியான நடவடிக்கை. உண்மைத்தன்மை இருக்கிறது என்ற அடிப்படையில் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்று நடைபெறும் எடப்பாடி பழனிசாமி அரசு, அனைத்து நிலைகளிலும் ஊழல் நிறைந்ததாக இருக்கிறது. இது அவர்கள் கட்சியை தொடங்கிய எம்.ஜி.ஆர்., கட்சியை வழி நடத்திச்சென்ற ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story