பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் மறியல்


பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் மறியல்
x
தினத்தந்தி 9 Aug 2017 4:45 AM IST (Updated: 9 Aug 2017 1:20 AM IST)
t-max-icont-min-icon

மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அரசு பஸ் மீது கல்வீசப்பட்டதில் கண்ணாடி உடைந்தது.

திருவொற்றியூர்,

சென்னை திருவொற்றியூர், சாத்தாங்காடு பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியின் தாளாளராகவும், உதவி பங்கு தந்தையாகவும் திருவொற்றியூரை சேர்ந்த ஆரோக்யம் (வயது 38) இருந்து வருகிறார். பள்ளியில் பிளஸ்–1 பயிலும் மாணவன் ஒருவனுக்கு ஆரோக்யம் செல்போனில் பாலியல் தொந்தரவு கொடுத்துவந்தார்.

இதில் மனமுடைந்த அந்த மாணவன் ஒரு வாரம் பள்ளிக்கு வராமல், நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்து மற்ற மாணவர்களிடம் இந்த தகவலை தெரிவித்தான். உடனே மற்ற மாணவர்கள் பள்ளி தாளாளரை கண்டித்து பள்ளியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் கிடைத்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியபோது, புகார் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்கள். மாலையில் மாணவர்கள் தாளாளர் மீது போலீசில் புகார் கொடுத்தனர்.

இந்நிலையில் நேற்று பள்ளி தாளாளர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி அப்பள்ளி மாணவர்கள் நேற்று காலை திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அந்த பக்கமாக திருவொற்றியூர் நோக்கி சென்றுகொண்டிருந்த அரசு பஸ் (தடம் எண்.56சி) மீது சிலர் கல்வீசி தாக்கியதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்தது.

சம்பவ இடத்திற்கு திருவொற்றியூர் போலீசார் விரைந்துவந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளி தாளாளர் மீது நடவடிக்கை எடுப்பதாக போலீசார் வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து மறியலை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். இந்த மறியலால் அப்பகுதியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போராட்டம் காரணமாக திருவொற்றியூர் போலீசார் பள்ளி தாளாளர் மீது வழக்கு பதிவு செய்ய உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story