ஏழ்மை காரணமாக சரியாக சாப்பிட முடியாமல் உடல் மெலிந்து இருந்த மாணவியிடம் கவர்னர் பரிவு


ஏழ்மை காரணமாக சரியாக சாப்பிட முடியாமல் உடல் மெலிந்து இருந்த மாணவியிடம் கவர்னர் பரிவு
x
தினத்தந்தி 8 Aug 2017 11:15 PM GMT (Updated: 2017-08-09T02:08:11+05:30)

சேதராப்பட்டில் உள்ள அரசு பள்ளியில் ஏழ்மை காரணமாக சரியான சத்துணவு சாப்பிட முடியாமல் மிகவும் உடல் மெலிந்து இருந்த மாணவியிடம் பரிவு காட்டி தொண்டு நிறுவனம் மூலம் அவருக்கு சத்துமாவு வழங்க நடவடிக்கை எடுத்தார்.

சேதராப்பட்டு,

புதுச்சேரி மாநில கவர்னர் கிரண்பெடி நேற்று காலை சேதராப்பட்டில் உள்ள அரசு பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பள்ளியின் ஒவ்வொரு வகுப்பறையாக சென்று அவர் பார்வையிட்டார்.

ஒரு வகுப்பறைக்கு சென்ற அவர், அங்கு ஒரு மாணவியிடம் ஆங்கில புத்தகம் ஒன்றைக் கொடுத்து அதனை படித்துக்காட்டச் சொன்னார். அந்த மாணவி அதனை சரியாக படித்ததால், மாணவிக்கு சால்வை அணிவித்து கவர்னர் பாராட்டு தெரிவித்தார்.

மற்றொரு வகுப்பறையை பார்வையிட்ட கவர்னர் கிரண்பெடி, அங்கிருந்த மாணவிகளில் ஒரு மாணவி மிகவும் உடல் மெலிந்து காணப்பட்டதை பார்த்தார். உடனே அந்த மாணவியை அழைத்து, சரியாக சாப்பிடுவதில்லையா? என்று பரிவுடன் கேட்டார். அப்போது அந்த மாணவி “தனது தந்தை இறந்துவிட்டதாகவும், ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால் சத்தான உணவு சாப்பிட வசதி இல்லை” என்று தெரிவித்தார்.

அதைத் தொடர்ந்து தனியார் தொண்டு நிறுவனம் மூலம் அந்த மாணவிக்கு சத்துமாவு வழங்க ஏற்பாடு செய்யும்படி உடன் வந்த அதிகாரிகளுக்கு கவர்னர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து பள்ளியின் கம்ப்யூட்டர் அறைக்கு சென்ற கவர்னர் அங்கு போதுமான வெளிச்சம் இல்லாமல் இருப்பதை கவனித்தார். அங்கு தேவையான மின்விளக்கு வசதிகள் செய்யும்படியும், பள்ளி கழிப்பறையை சுத்தமாக பராமரிக்கும்படியும், பள்ளிக் கட்டிடத்துக்கு வர்ணம்பூசும்படியும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வின்போது கல்வித்துறை இயக்குனர் குமார், இணை இயக்குனர் கிருஷ்ணராஜ் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்

Next Story