கோர்ட்டு வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி படுகாயம்


கோர்ட்டு வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி படுகாயம்
x
தினத்தந்தி 8 Aug 2017 10:38 PM GMT (Updated: 2017-08-09T04:08:18+05:30)

விஜயாப்புராவில் கோர்ட்டு வளாகத்தில் துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி மீது குண்டுகள் பாய்ந்தன. அவர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக 2 மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.

பெங்களூரு,

‘பீமாபுரா கொலையாளி‘ என அழைக்கப்படுபவர் பாகப்பா ஹரிஜான் (வயது 40). ரவுடியான இவர் மீது விஜயாப்புரா, கலபுரகி, மராட்டியத்தின் சில பகுதிகளில் கொலை, கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் பதிவாகி உள்ளது. குற்ற வழக்கில் கைதாகி சிறைவாசம் அனுபவித்த பாகப்பா ஹரிஜான் சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்தார்.

இந்த நிலையில், உறவினர் ஒருவரை கொலை செய்த வழக்கு ஒன்று விஜயாப்புரா மாவட்ட கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் ஆஜராக வேண்டி நேற்று காலையில் பாகப்பா ஹரிஜான் கோர்ட்டுக்கு வந்தார். பின்னர், அவர் கோர்ட்டு வளாகத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

இந்த வேளையில், கோர்ட்டு வளாகத்தில் நின்ற மர்மநபர் ஒருவர் பாகப்பா ஹரிஜானை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுவிட்டு மின்னல் வேகத்தில் அங்கிருந்து தயாராக இருந்த மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி சென்றுவிட்டார். துப்பாக்கியால் 5–க்கும் அதிக முறை சுட்டதில் 4 குண்டுகள் பாகப்பா ஹரிஜானின் உடலில் பாய்ந்தன. இதனால், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிருக்கு போராடினார்.

இதை கோர்ட்டு வளாகத்தில் நின்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் ஜலாநகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததுடன், பாகப்பா ஹரிஜானை மீட்டு விஜயாப்புரா அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருடைய உடலில் பாய்ந்த குண்டுகளை டாக்டர்கள் சிகிச்சை மூலம் அகற்றினர். மேலும், ஜலாநகர் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை சுற்றி யாரும் செல்ல முடியாத வகையில் கயிறுகள் கட்டி ஆய்வு செய்தனர். பின்னர், விஜயாப்புரா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு குல்தீப் குமார் ஜெயின் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு தீவிர விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு குல்தீப் குமார் ஜெயின் கூறுகையில், ‘முன்விரோதம் காரணமாக கொலை செய்யும் நோக்கத்தில் பாகப்பா ஹரிஜான் மீது துப்பாக்கியால் சுடப்பட்டு இருக்கலாம். குண்டுகாயம் அடைந்த பாகப்பா ஹரிஜானுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சம்பவ இடத்தில் கிடந்த குண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. சம்பவத்தை நேரில் பார்த்தவர்களிடம் விசாரணை நடத்தினோம். அப்போது கோர்ட்டு வளாகத்தில் உள்ள மரத்தின் பின்னால் மறைந்து நின்ற மர்மநபர் துப்பாக்கியால் பாகப்பா ஹரிஜானை சுட்டுவிட்டு மோட்டார் சைக்கிள் ஏறி சென்றது தெரியவந்துள்ளது. சம்பவம் குறித்து ஜலாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி துப்பாக்கியால் சுட்ட நபரையும், மோட்டார் சைக்கிள் ஓட்டிய நபரையும் வலைவீசி தேடிவருகிறார்கள்‘ என்றார்.

விஜயாப்புரா கோர்ட்டு வளாகத்தில் ரவுடியை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற சம்பவம் அங்கு நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் தொடர்ச்சியாக கோர்ட்டு வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.


Next Story