எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்கள்: அரியலூரில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா


எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்கள்: அரியலூரில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா
x
தினத்தந்தி 22 Aug 2017 11:15 PM GMT (Updated: 22 Aug 2017 10:00 PM GMT)

அரியலூரில் இன்று நடைபெற உள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்கிறார்கள். இந்த விழாவில் அரசு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்படுகிறது.

அரியலூர்,

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா தமிழக அரசு சார்பில் மாவட்டந்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி அரியலூரில் அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் இன்று (புதன்கிழமை) மாலை 5 மணி அளவில்

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.

விழாவுக்கு தமிழக சட்டமன்ற சபாநாயகர் தனபால் தலைமை தாங்குகிறார். விழாவில் தமிழக முதல் - அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு எம்.ஜி.ஆர். உருவ படத்தை திறந்து வைத்தும், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் பேசுகிறார்.

விழாவுக்கு தமிழக துணை முதல் -அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, ஆர். வைத்திலிங்கம் எம்.பி. ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள். மேலும் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்கிறார்கள். முன்னதாக தமிழக அரசின் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் வரவேற்று பேசுகிறார். முடிவில் அரியலூர் மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா நன்றி கூறுகிறார்.

இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.5.53 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை துவக்கி வைத்தும், ரூ.69.05 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, நலத்திட்ட உதவிகளையும் வழங்குகிறார். முன்னதாக மாலை 4 மணி அளவில் எம்.ஜி.ஆர். புகழ்பாடும் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் கலை நிகழ்ச்சிகள் விழா பந்தலில் நடைபெற உள்ளது. விழா மேடை அருகே எம்.ஜி.ஆர். பற்றிய புகைப்பட கண்காட்சியும் அமைக்கப்பட்டு உள்ளது.

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடங்கிய போது அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வமும் இரு அணிகளாக செயல்பட்டு வந்தனர். இரு அணிகளும் நேற்று முன்தினம் ஒன்றாக இணைந்த பின்னர் நடைபெறும் முதல் விழா தற்போது அரியலூரில் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

Related Tags :
Next Story