பராமரிப்பு பணிக்காக அப்துல்கலாம் மணிமண்டபத்துக்கு செல்ல திங்கட்கிழமைதோறும் அனுமதி இல்லை


பராமரிப்பு பணிக்காக அப்துல்கலாம் மணிமண்டபத்துக்கு செல்ல திங்கட்கிழமைதோறும் அனுமதி இல்லை
x
தினத்தந்தி 5 Sept 2017 4:30 AM IST (Updated: 4 Sept 2017 11:56 PM IST)
t-max-icont-min-icon

பராமரிப்பு பணிக்காக திங்கட்கிழமைதோறும் அப்துல்கலாம் மணிமண்டபத்துக்கு செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என்று பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளார்.

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே பேய்க்கரும்பு பகுதியில் முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் நினைவிடத்தில் மணிமண்டபம் உள்ளது. இங்கு தினந்தோறும் ஏராளமானோர் வந்து மணிமண்டபத்தை பார்வையிட்டு நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி செல்கின்றனர். இங்கு காலை 9 மணி முதல் 1 மணி வரையிலும் மதியம் 2 மணி முதல் 5 மணி வரையிலும் பார்வையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் மணிமண்டபம் பராமரிப்பு பணி காரணமாக திங்கட்கிழமைதோறும் பார்வையாளர்களுக்கு அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டு உள்ளது. இது இந்த மாதம் (செப்டம்பர்) முதல் அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதன்படி நேற்று மணி மண்டபம் நுழைவுவாசலில் இதுதொடர்பாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு இருந்தது.

முன்கூட்டியே எந்த ஒரு அறிவிப்பும் செய்யாததால் நேற்று அப்துல்கலாம் மணிமண்டபத்தை காண வந்த பார்வையாளர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் தமிழகம் மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த ஏராளமான பொதுமக்கள் மணி மண்டபத்தின் உள்ளே சென்று பார்க்க முடியாமல் மிகுந்த ஏமாற்றத்துடன் திரும்பிச்சென்றனர்.

இதுகுறித்து பாதுகாப்புதுறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:–

அப்துல்கலாம் மணி மண்டபத்தை காண தினந்தோறும் சராசரியாக 3000 பேர் வந்து பார்த்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் 10–லிருந்து 15 ஆயிரம் பேர் வரை வந்து செல்கின்றனர். குறிப்பாக விடுமுறை நாட்களான சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களிலும் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்கின்றனர். திங்கட்கிழமை மட்டும் பராமரிப்பு பணிக்காக மணிமண்டபத்துக்குள் செல்ல பார்வையாளர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். இந்த மாதம் முதல் இந்த நடைமுறை அமல் படுத்தப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story