பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்


பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Sep 2017 10:45 PM GMT (Updated: 5 Sep 2017 9:42 PM GMT)

திருவாரூர் அருகே பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவ சாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

திருவாரூர் அருகே உள்ள ஓவிலிகுடி, மேலபாலையூர், கீழபாலையூர், மருவத்தூர், கழனிவாசல் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகளுக்கு இந்த ஆண்டுக்கான பயிர்க்காப்பீட்டு தொகை வழங்கப்படவில்லை. இதை கண்டித்தும், பயிர்க்காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்கக்கோரியும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் அருகே உள்ள மாவூர் கடைவீதியில் நேற்று 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின்போது பயிர்க்காப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோஷங்களை எழுப்பினர்.

போராட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். தி.மு.க. மாவட்ட பிரதிநிதி கருணாகரன், நிர்வாகி பக்கிரிசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் இடும்பையன், பா.ஜனதா கட்சியை சேர்ந்த விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ராஜ்மோகன், விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் பவுன்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த திருவாரூர் மாவட்ட வேளாண்மை துணை இயக்குனர் சிவக்குமார், தாசில்தார் அம்பிகாபதி, திருவாரூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் பயிர்க்காப்பீட்டு தொகை வழங்க உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதனை தொடர்ந்து விவசாயிகள் மறியல் போராட்டத்தை கைவிட்டனர். விவசாயிகளின் மறியல் போராட்டம் காரணமாக திருவாரூர்-திருத்துறைப்பூண்டி சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Related Tags :
Next Story