மார்த்தாண்டம் மேம்பாலத்தில் இரும்பு தூண்கள் அமைக்கும் பணி தீவிரம்


மார்த்தாண்டம் மேம்பாலத்தில் இரும்பு தூண்கள் அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 20 Sep 2017 10:45 PM GMT (Updated: 20 Sep 2017 3:21 PM GMT)

மார்த்தாண்டம் மேம்பாலத்தில் இரும்பு தூண்கள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

குழித்துறை,

நாகர்கோவில்–திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலையில், மார்த்தாண்டத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மத்திய சாலை போக்குவரத்து துறை சார்பில் நடைபெறும் இந்த மேம்பாலம் தென்னிந்தியாவிலேயே நீளமான இரும்பு பாலமாக அமைக்கப்படுகிறது.

இந்த மேம்பாலம் மார்த்தாண்டம் பம்மத்தில் இருந்து வெட்டுமணியில் தாமிரபரணி ஆறு வரை 2½கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்படுகிறது.

இதற்கான பணிகள் கடந்த 2016–ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த மேம்பால பணிகளை முன்னிட்டு மார்த்தாண்டத்தில் பஸ் போக்குவரத்து மற்றும் இதர வாகன போக்குவரத்துகளிலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர்.

இந்த மேம்பாலத்தில், முதல் கட்டமாக தரை தள தூண்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மொத்தம் 110 தூண்கள் அமைக்கப்படுகிறது. அவற்றிலும் 90 சதவீதம் தரை தள தூண்கள் அமைக்கும் பணிகள் முடிவடைந்துள்ளது. மேலும் அந்த தரைதள தூண்களுக்கு மேல் இரும்பு தூண்கள் அமைக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

மேலும் மார்த்தாண்டம் சந்திப்பில் இருந்து பஸ்நிலையம் செல்லும் சாலையில் சாய்வு சாலையும் அமைப்பதற்கான பணிகளும் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பால பணிகள் 2018–ம் ஆண்டு இறுதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Related Tags :
Next Story