ஒன்றிய அலுவலக வளாகத்தில் தனியார் வசம் இருந்த 4 கடைகள் மீட்பு அதிகாரிகள் நடவடிக்கை


ஒன்றிய அலுவலக வளாகத்தில் தனியார் வசம் இருந்த 4 கடைகள் மீட்பு அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 20 Sep 2017 10:45 PM GMT (Updated: 20 Sep 2017 9:20 PM GMT)

தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தனியார் வசம் இருந்த 4 கடைகளை அதிகாரிகள் பூட்டுகளை உடைத்து அதிரடியாக மீட்டனர்.

தொட்டியம்,

திருச்சி மாவட்டம் தொட்டியம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் கிழக்கு பகுதியில் புதிதாக கட்டப்பட்ட வணிக வளாக கடைகளை கடந்த 21.2.2016 அன்று ஒன்றியக்குழு தீர்மானத்தின் படி 4 நபர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த கடைகள் அரசு விதிகளுக்குட்பட்டு ஒதுக்கீடு செய்யப்படவில்லை, கடைகள் ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி அப்போதைய தே.மு.தி.க. கவுன்சிலர்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் மற்றும் ஒன்றிய அலுவலக கட்டிடத்தின் மேல் ஏறி நின்று தற்கொலை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பேச்சுவார்த்தை நடத்திய மாவட்ட ஊராட்சிகளின் இயக்குனர் ஒன்றியக்குழு தீர்மானத்தின்படி ஒதுக்கீடு செய்த வணிக வளாக கடைகள் ஒதுக்கீட்டை ரத்து செய்தார்.

ரத்து செய்ததை எதிர்த்து கடைகள் ஒதுக்கீடு பெற்ற 4 பேரும் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடுத்தனர். அந்த வழக்கில் கடந்த 23.6.2016-ந்தேதி ஒன்றியக்குழு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்ட கடைகள் ரத்து செய்யப்பட்டு பொது ஏலம் மூலம் ஒதுக்கீடு செய்ய தீர்ப்பளிக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்ப்பின் படி நான்கு கடைகளையும் ஒன்றியக்குழு மூலம் ஒதுக்கீடு செய்யப்பட்டவர்கள் காலி செய்யாமல் இருந்து வந்தனர். கடையை ஊராட்சி ஒன்றியத்திடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பல முறை அறிவிப்பு கொடுத்தும் வணிக வளாக கடைகளை ஒதுக்கீடு செய்யப்பட்ட 4 நபர்களும் கடைகளின் சாவியை ஒப்படைக்கவில்லை. இதையடுத்து நேற்று தொட்டியம் ஊராட்சி ஒன்றிய ஆணையர் நாராயணன், சப்-இன்ஸ்பெக்டர் முத்தையன், வருவாய் ஆய்வாளர் கீதா, கிராம நிர்வாக அதிகாரி மோகன் ஆகியோர் ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் உள்ள அந்த 4 கடைகளின் பூட்டுகளை உடைத்து ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் கடைகளை கொண்டு வந்தனர். 

Related Tags :
Next Story