தசரா விழா குறித்து சித்தராமையா பேட்டி


தசரா விழா குறித்து சித்தராமையா பேட்டி
x
தினத்தந்தி 20 Sep 2017 11:25 PM GMT (Updated: 2017-09-21T04:55:47+05:30)

எனக்கு 8 வயதாக இருந்தபோது என் தந்தையின் தோள் மீது அமர்ந்து தசரா ஊர்வலத்தை பார்த்தேன் என்று சித்தராமையா கூறினார்.

பெங்களூரு,

உலக புகழ் பெற்ற தசரா விழா மைசூருவில் இன்று(வியாழக்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சித்தராமையா ‘ஆகாசவாணி‘ வானொலிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

தசரா விழா கர்நாடகத்தின் பெருமைக்குரிய பண்டிகை ஆகும். மைசூரு தசரா விழா பல சிறப்புகளை கொண்டுள்ளது. கர்நாடக வரலாற்றில் மிக சிறப்பாக ஆட்சி புரிந்த விஜயநகர பேரரசர்கள் இந்த தசரா விழாவை தொடங்கி கொண்டாடினர். விஜயநகர சாம்ராஜ்ஜியத்திற்கு பிறகு மைசூரு மகாராஜா குடும்பத்தினர் இந்த விழாவை தொடர்ந்து நடத்தினர்.

அதே பாரம்பரியத்தை பாதுகாத்து கொண்டு இந்த தசரா விழா இப்போது அர்த்தப்பூர்வமாக கொண்டாடப்படுகிறது. அந்த காலத்தில் பாரம்பரிய முறைப்படி நடத்தப்பட்ட தசரா விழாவுக்கு எந்த குறையும் இல்லாதவாறு இந்த பண்டிகையை தொடர்ந்து கொண்டாடி வருகிறோம். ஒவ்வொரு ஆண்டும் தசரா பண்டிகையை கொண்டாடுவது குறித்து முடிவு எடுக்க ஒரு உயர்மட்ட குழு உள்ளது. இங்கு எடுக்கும் முடிவின்படி மாவட்ட பொறுப்பு மந்திரி தலைமையில் ஒரு செயல் குழு அமைக்கப்படுகிறது.

மாவட்ட கலெக்டர் தலைமையில் 17 துணை குழுக்கள் அமைக்கப்படுகின்றன. இந்த குழுக்கள் செயல் குழுவின் வழிகாட்டுதலின்படி செயல்படுகின்றன. இந்த ஆண்டு தசரா பண்டிகையை கொண்டாட மாநில அரசு ரூ.17 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு ரூ.13.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சாம்ராஜ்நகரில் தசரா பண்டிகைக்கு ரூ.1 கோடி, ஸ்ரீரங்கபட்டணத்திற்கு ரூ.50 லட்சம் நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.

இந்த மைசூரு தசரா பண்டிகை தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த பண்டிகை கொண்டாட்டத்தை பார்க்க உலகின் பல்வேறு நாடுகளில் இருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் கர்நாடகம் வருகிறார்கள். பெரும் கலாசார மக்கள் கலந்து கொள்ளும் இந்த 10 நாட்கள் பண்டிகையில் மைசூருவை அலங்கரிப்பது, மனமகிழ் நிகழ்ச்சிகளை நடத்துவது என்பது முக்கிய பணியாகும்.

இந்த ஆண்டு முதல் முறையாக மைசூருவில் உலக சுற்றுலா தினம் கொண்டாடப்படுகிறது. மைசூரு தேவராஜ் அர்ஸ் ரோட்டில் திறந்தவெளி தெரு(ஓபன் ஸ்ட்ரீட்) தினம் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் நல்ல மழை பெய்து, அணைகள் நிரம்பி வருகின்றன. அணைகள் இன்னும் முழுமையாக நிரம்பவில்லை என்றாலும் விவசாயிகளின் முகத்தில் மகிழ்ச்சியை காண முடிகிறது.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு நிலைமை நன்றாக உள்ளது. இதனால் இந்த தசரா பண்டிகையை சற்று சிறப்பாக கொண்டாடும்படி உத்தரவிட்டுள்ளேன். நான் முதல்–மந்திரியாக 5–வது முறையாக தசரா விழாவில் கலந்து கொள்கிறேன். மைசூரு அரண்மனைகளின் நகரம். ஆரம்பம் முதலே இது சுற்றுலா பயணிகளுக்கு பிடித்தமான நகரம் ஆகும். சாமுண்டி மலை, பிருந்தாவன் பூங்கா, கே.ஆர்.எஸ். அணை, ரங்கணதிட்டு போன்ற சுற்றுலா தலங்களை பார்க்க ஏராளமான மக்கள் இங்கு வருகிறார்கள்.

அதனால் சுற்றுலா தலங்களை மேம்படுத்த மாநில அரசு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. நாளை(அதாவது, இன்று) காலை 8.45 மணிக்கு கன்னட கவிஞர் நிசார் அகமது தசரா விழாவை மைசூரு சாமுண்டி மலையில் தொடங்கி வைக்கிறார். அதைத்தொடர்ந்து தசரா கண்காட்சியும் தொடங்கி வைக்கப்படுகிறது. அரண்மனையில் கலாசார நிகழ்ச்சிகளும் தொடர்ந்து நடைபெறும்.

விஜயதசமி ஊர்வலம் மிக முக்கியமானது. இந்த முறை டெல்லியில் குடியரசு தின விழாவில் நடைபெறும் அணிவகுப்பை போன்று சிறப்பாக நடத்த உத்தரவிட்டுள்ளேன். பல்வேறு கலைகளை சேர்ந்த 40 குழுக்கள், இலங்கை, வங்காளதேசத்தை சேர்ந்த 2 குழுக்கள் இதில் கலந்து கொள்கின்றன. இந்த ஆண்டு தசரா பண்டிகையை அர்த்தப்பூர்வமாக கொண்டாட அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மைசூருவில் விமான கண்காட்சி நடத்த வேண்டும், அணிவகுப்பில் ராணுவ குழுவை பங்கேற்க செய்ய வேண்டும் என்று ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். இது தசரா ஊர்வலத்திற்கு மேலும் மெருகேற்றும் வகையில் இருக்கும். ஏராளமான சுற்றுலா பயணிகள் மைசூரு வருவார்கள். அவர்களுக்கு கர்நாடகத்தின் கலாசாரத்தை பறைசாற்றும் வகையில் மைசூரு மாநகரம் மிக சிறப்பான முறையில் அலங்கரிப்பட்டு வருகிறது.

சாலைகள், நடைபாதைகள் நல்ல முறையில் அமைக்கப்பட்டுள்ளன. நகரில் முக்கியமான சாலைகள், அரண்மனைகள் மின் விளக்குகளால் அலங்காரம் செய்யப்படுகின்றன. சுவர்களில் கலாசாரத்தை வெளிப்படுத்தும் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. எனக்கு 8 வயது இருந்தபோது தசரா ஊர்வலத்தை பார்க்க எனது தந்தையுடன் மைசூருவுக்கு வந்தேன்.

அப்போது தான் நான் முதல் முறையாக தசரா ஊர்வலத்தை பார்த்தேன். பன்னி மண்டபம் அருகே உள்ள பம்பு பஜாரில் ஊர்வலத்தை பார்த்தேன். மக்கள் கூட்டம் அலைமோதியதால் என்னால் ஊர்வலத்தை சரியாக பார்க்க முடியவில்லை. மகாராஜாக்கள் வருகிறார்கள், கை எடுத்து கும்பிடு என்று எனது தந்தை கூறினார். எனக்கு எதுவுமே தெரியவில்லையே என்று சொன்னேன்.

அப்போது எனது தந்தையின் தோள் மீது அமர்ந்து ஊர்வலத்தை பார்த்தேன். அந்த காட்சிகள் இப்போதும் என் கண் முன்னே நிழலாடுகின்றன. என்னுடைய இந்த முதல் தசரா அனுபவத்தை எப்போதும் மறக்க முடியாது. மாநிலத்தில் நல்ல மழை பெய்து வருவதால் நல்ல விளைச்சல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். மக்கள் இந்த தசரா விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறேன். அனைவருக்கும் தசரா பண்டிகை வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story