இளஞ்சிவப்பு பவளப் பாறைகள் எனும் இயற்கை அதிசயம்


இளஞ்சிவப்பு பவளப் பாறைகள் எனும் இயற்கை அதிசயம்
x
தினத்தந்தி 23 Sep 2017 10:10 AM GMT (Updated: 23 Sep 2017 10:10 AM GMT)

பவளப்பாறைகள் உயிரணு மற்றும் முட்டைகளை வெளியேற்றும்போது நீரில் அவை முளைத்து முட்டைகளாக மேல்நோக்கி மேற்பரப்புக்கு வந்து மிதக்கும்.

வ்வோர் ஆண்டும் ஆஸ்திரேலியாவைச் சுற்றி யுள்ள கடலில் பெரிய அளவில் உருவாகும் இளஞ்சிவப்பு பவளப் பாறைகள் பூமியின் மிகப் பெரிய கவர்ச்சிகரமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

ஆஸ்திரேலியாவின் வடகிழக்கு கரையோரப் பகுதியில் அமைந்துள்ள ‘தி கிரேட் பேரியர் ரீப்’ எனப்படும் பெரும் தடுப்புப் பவளத்திட்டு  விண்வெளியில் இருந்தும் தென்படக் கூடியதாகும்.

மொத்தம் 1,430 மைல் நீளத்துக்கு நீண்டுள்ள இந்த இடத்தில் மூவாயிரத்துக்கும் அதிகமான பவளப்பாறைகள் கொண்ட பவள காலனிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை இனப்பெருக்கம் செய்வதற்கு ஏற்றவாறு ஒருங்கிணைந்துள்ளன.

பவளப்பாறைகள் உயிரணு மற்றும் முட்டைகளை வெளியேற்றும்போது நீரில் அவை முளைத்து முட்டைகளாக மேல்நோக்கி மேற்பரப்புக்கு  வந்து மிதக்கும். அவை கருத்தரித்து, முட்டைகள் லார்வாக்களாக வளர்வதற்கு முன்பே கடல்படுகையில் தங்களுக்கான சொந்த காலனியை உருவாக்க வேண்டும்.

பெரும் தடுப்புப் பவளத்திட்டு பகுதியில் இளவேனில் காலத்தில் பாலின செல்கள் முதிர்ச்சியடைவதற்குப் போதுமான வெப்பநிலை ஏற்படும்போது இந்த நிகழ்வு நடைபெறும். ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் பவளப்பாறைகள் உருவாக்கம் இலையுதிர்க் காலத்தில் நடைபெற்றாலும், சில வடபகுதிகளில் இரண்டு பருவங்களிலும் இவை உருவாகின்றன.

பவுர்ணமிக்குப் பிறகு உருவாகும் இவை, அலைகளின் வேகம் இயல்பாக இருக்கும்போது முட்டைகளும், உயிரணுக்களும் அடித்துச் செல்லப்படாமல், கரையோரங்களில் சுதந்திரமாக மிதக்கின்றன.

பிற உயிரினங்களால் பகல் வேளைகளில் முட்டைகள் உண்ணப்படும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும் நிலையில், இரவின் இருள் அந்த ஆபத்தை பாதியாகக் குறைக்கிறது.

ஒரே நேரத்தில் பெருமளவிலான முட்டைகள் வெளியாவதால், அவற்றை இரையாகக் கொள்பவை, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் உண்ணமுடியாது என்பதால் போதுமான அளவு பவளப்பாறைகள் முளைக்கின்றன.

முற்காலத்தில் கண்கள் இல்லாமல் தோன்றிய உயிரினங்கள் என்று அழைக்கப்படும் இவை ஒருங்கிணைந்த முயற்சி, சுவாரசியமாக இருக்கிறது.

ஆஸ்திரேலியாவின் பவளப்பாறைகளை ஆராயும் டாக்டர் ஓரென் லெவி, டாக்டர் பில் லெகட், பேராசிரியர் கவுக்குல்பெர்க் ஆகியோர், இவை நீல நிறத்தின் உணர்திறன் கொண்டிருப்பதைக் கண்டறிந்தனர். அவை சந்திரனின் சுழற்சியில் எவ்வாறு பிரதிபலிக் கின்றன என்பதை விளக்குகின்றன.

பவளப்பாறைகள் தொடர்பான வெகுஜன பகுப்பாய்வில், இது சமீபத்திய கண்டுபிடிப்பு. ஏனென்றால், இந்த நிகழ்வு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நிகழ்ந்தாலும், 1981–ம் ஆண்டில்தான் முதன்முறையாக பதிவு செய்யப்பட்டது.

பவளப் பாறை உயிரணு, முட்டைகள் வெளியாகும் வருடாந்தர நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்துகொள்ளும் நீர் மூழ்குபவர்கள், அங்கு முட்டைகள் மற்றும் உயிரணுக்கள் நீரின் மேற்பரப்பில் நீந்திச் செல்வதை ‘நீருக்கடியில் பனிமலை’ என்று விவரிக்கின்றனர்.

பவளப்பாறைகளில் இருந்து வெளிவரும் ஆயிரக் கணக்கான பாலியல் செல்கள், பெரும்பாலும் சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு வண்ணத் துகள்களாக ஒளிரும்.

குறிப்பிட்ட காலத்தில் பவளப் பாறை பகுதி பல நூறு மைல்களுக்கு இளஞ்சிவப்பு நிறத்தில் ஜொலிக்கிறது. இவை செயற்கைக்கோள் படங்களிலும் தென்படுகின்றன.

இயற்கை புரியும் எண்ணற்ற அதிசயங்களில் இந்த இளஞ்சிவப்பு பவளப் பாறை ஜாலமும் ஒன்று!

Next Story