ஊத்துக்குளி அருகே இளம்பெண் கழுத்தை அறுத்துக்கொலை விடியவிடிய அழுது கொண்டிருந்த குழந்தை


ஊத்துக்குளி அருகே  இளம்பெண் கழுத்தை அறுத்துக்கொலை விடியவிடிய அழுது கொண்டிருந்த குழந்தை
x
தினத்தந்தி 29 Sept 2017 5:45 AM IST (Updated: 29 Sept 2017 3:43 AM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்குளி அருகே இளம்பெண் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார். தாயின் உடல் அருகே விடிய விடிய குழந்தை அழுது கொண்டிருந்த சம்பவம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

ஊத்துக்குளி,

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே செங்கப்பள்ளியில் இருந்து கோவை-சேலம் பைபாஸ் சாலைக்கு செல்லும் ரோட்டில் பயணியர் விடுதி உள்ளது. இந்த நிலையில் நேற்று காலையில் அந்த விடுதியில் இருந்து 100 அடி தொலைவில் குழந்தை அழும் குரல் கேட்டது. இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு சென்று பார்த்தபோது ஒரு இளம்பெண் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும், அந்த பெண்ணின் அருகில் ஒரு குழந்தை அழுது கொண்டு இருப்பதையும் பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஊத்துக்குளி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர்.

அப்போது அங்கு கால் முட்டு மடங்கிய நிலையில், குப்புற அந்த பெண் பிணமாக கிடந்தார். அந்த பெண்ணின் உடல் அருகில் அழுதுகொண்டிருந்த ஆண் குழந்தைக்கு அந்த பெண்தான் தாயாக இருக்க வேண்டும் என்றும் அந்த குழந்தைக்கு 1½ வயது இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். பின்னர் அந்த பெண்ணின் உடலை போலீசார் புரட்டிப்பார்த்தபோது கழுத்து கத்தியால் கொடூரமாக அறுக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது.

மேலும் அந்த பெண்ணின் முகம் அடையாளம் தெரியாத அளவுக்கு ரத்தக்கறையாக இருந்தது. பெண்ணின் உடல் அருகேயும் ரத்தம் உறைந்து கிடந்தது. வட மாநிலத்தை சேர்ந்தவர் போன்று தோற்றம் கொண்ட அந்த பெண், சுடிதார் அணிந்து இருந்தார். தலையில் பெண்கள் அழகுக்காக சூடிக்கொள்ளும் பிளாஸ்டிக் வளையம் மாட்டியிருந்தார். தலை அருகில் பிளாஸ்டிக் டம்ளர் ஒன்றும், காலி தண்ணீர் பாட்டில் ஒன்றும் கிடந்தது. கையில் புதிய டிசைனில் வளையலும் போட்டிருந்தார்.

உடல் கிடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் அந்த பெண் தலையில் வைத்திருந்த மல்லிகைப்பூ மற்றும் சிறிய கத்தி ஒன்றும் கீழே கிடந்தது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தெரியவில்லை. எனவே அவரை அடையாளம் காண செல்போன் ஏதாவது வைத்திருந்தாரா? என்று போலீசார் தேடிப்பார்த்தனர். ஆனால் செல்போன் மற்றும் எந்த முகவரியும் இல்லை.

பின்னர் போலீஸ் மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. இந்த மோப்ப நாய் அந்த பெண் உடல் கிடந்த இடத்தில் இருந்து பைபாஸ் சாலை வரை ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. அதைத்தொடர்ந்து தடய அறிவியல் நிபுணர்கள் வந்து, அங்கு கிடந்த தடயங்களை சேகரித்தனர். பின்னர் அந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இந்த கொலை நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்து இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. தாய் கொலை செய்யப்பட்டது கூட தெரியாத அந்த குழந்தை தாயின் உடல் அருகே விடிய விடிய அழுதுகொண்டிருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

எனவே மர்ம கும்பல் அந்த இளம்பெண்ணை குழந்தையுடன் காரில் கடத்தி வந்து இருக்கலாம் என்றும், குழந்தையின் கண் எதிரே தாயின் கழுத்தை அறுத்து இருக்கலாம் என்றும், அப்போது தாயின் கழுத்தில் இருந்து பீறிட்டு வெளியேறிய ரத்தம் குழந்தையின் உடலில் பட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர். மேலும் அந்த பெண்ணின் கழுத்தை அறுக்க பயன்படுத்திய கத்தியை மர்ம ஆசாமிகள் அங்கேயே போட்டு விட்டு காரில் தப்பிச்சென்று இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

இதையடுத்து ஊத்துக்குளி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி செய்தனரா? என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகிறார்கள். இதைத்தொடர்ந்து அந்த குழந்தையை ஊத்துக்குளி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் கிணத்துக்கடவில் உள்ள ஒரு காப்பகத்தில் கொண்டு சேர்த்தனர்.
மேலும் கோவை-சேலம் புறவழிச்சாலை சுங்க சாவடியில் பொருத்தப்பட்டு இருக்கும் கண்காணிப்பு கேமராவில் பதிவான வாகனங்கள் குறித்து போலீசார் ஆய்வு செய்து வருகிறார்கள்.

காபி, பிஸ்கெட் வாங்கி கொடுத்த பொதுமக்கள்

எப்போதும் தூக்கிக்கொஞ்சும் தாய், தன்னை கண்டுகொள்ளாமல் இப்படி தூங்குகிறாரே? தாயின் தூக்கம் கலையட்டும் என்று வைத்தகண் வாங்காமல் தாயின் உடலை பார்த்தபடி அந்த குழந்தை காத்திருந்த சம்பவம் கல்நெஞ்சையும் உருக வைக்கும் நிகழ்வாக இருந்தது. அப்போது சம்பவ இடத்தில் சுற்றி நின்ற அந்த பகுதி பொதுமக்கள் சிலர், அந்த குழந்தைக்கு பசி எடுக்குமே என்ற நல்ல எண்ணத்தில் அருகில் இருந்த கடைக்கு ஓடிச்சென்று காபி, பிஸ்கெட் ஆகியவற்றை வாங்கி வந்து கொடுத்தனர். நீண்ட நேரமாக பசியுடன் இருந்த அந்த குழந்தை அவற்றை வாங்கி சாப்பிட்டது.

குழந்தையின் உடலில் ரத்தக்கறை

தாய் கொலை செய்யப்பட்டது கூட தெரியாத அந்த குழந்தை விடியவிடிய தாயின் உடல் அருகே அழுது கொண்டிருந்ததால் குழந்தையின் முகம் வீங்கி இருந்தது. மேலும் குழந்தையின் உடல் முழுவதும் ரத்த துளிகள் இருந்தன. தாய் கொடூரமாக கொலை செய்யப்பட்டது கூட தெரியாத அந்த குழந்தை தாயின் அருகிலேயே கண்ணீர் விட்டு கதறி அழுதது பார்ப்போர் நெஞ்சை உருக வைத்தது.

Next Story