காலையில் இறந்த ஆட்டோ டிரைவர் மாலையில் உயிர்பெற்று மீண்டும் மரணம் சின்னமனூர் அருகே வினோத சம்பவம்


காலையில் இறந்த ஆட்டோ டிரைவர் மாலையில் உயிர்பெற்று மீண்டும் மரணம் சின்னமனூர் அருகே வினோத சம்பவம்
x
தினத்தந்தி 3 Oct 2017 5:45 AM IST (Updated: 3 Oct 2017 4:20 AM IST)
t-max-icont-min-icon

சின்னமனூர் அருகே நடைபயிற்சியின் போது மயங்கி விழுந்து காலையில் இறந்த ஆட்டோ டிரைவர் மாலையில் உயிர்பெற்று மீண்டும் மரணம் அடைந்தார்.

சின்னமனூர்,

தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள அய்யம்பட்டியை சேர்ந்தவர் முத்தழகு. அவருடைய மகன் அறிவுச்செல்வம்(வயது33). ஆட்டோ டிரைவர். இவர் நேற்று காலை, அந்த பகுதியில் நடை பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

அதை பார்த்த பொதுமக்கள், அவரை மீட்டு சிகிச்சைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடல் வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் அவருடைய உடல், உறவினர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக குளிர்பதன பெட்டியில் வைக்கப்பட்டது. தகவலறிந்து உறவினர்களும் வந்தனர். இறுதி சடங்கு செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. அவர் இறந்ததை தொடர்ந்து ஊர் முழுவதும் அவருக்கு கண்ணீர் அஞ்சலி சுவரொட்டி ஒட்டப்பட்டது. மேலும் அவரை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்தன.

இதற்கிடையே சுமார் 8 மணி நேரத்துக்கு பிறகு மாலை நேரத்தில் அவருடைய கை, கால்களில் திடீரென அசைவு ஏற்பட்டது. இதைக்கண்ட உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அப்பகுதியில் உள்ள டாக்டர் ஒருவரை அழைத்து வந்தனர். அவர் பரிசோதனை செய்தபோது, அறிவுச்செல்வத்துக்கு நாடித்துடிப்பு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றால் உயிர்பிழைக்க வாய்ப்புள்ளதாக உறவினர்களிடம் டாக்டர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து அவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்ல உறவினர்கள் முடிவு செய்து ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதேநேரம் அவரை அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட குழியில் சேவலை அறுத்து புதைத்துவிட்டனர். மேலும் ஒட்டப்பட்ட கண்ணீர் அஞ்சலி சுவரொட்டிகளையும் உறவினர்கள் கிழித்தனர்.

இந்தநிலையில் ஆம்புலன்ஸ் வர காலதாமதம் ஏற்பட்டது. இதனால் ஜீப்பில் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் ஆம்புலன்ஸ் வரவே, ஜீப்பில் இருந்து ஆம்புலன்சில் அவரை ஏற்றி மருத்துவமனைக்கு விரைந்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார். இறந்ததாக கூறப்பட்ட ஆட்டோ டிரைவர் உயிர் பிழைத்ததால் உறவினர்கள் அடைந்த மகிழ்ச்சி சில நிமிடம் கூட நிலைக்காமல், மீண்டும் அவர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

Next Story