மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: துபாயில் இறந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி மனைவி மனு


மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்: துபாயில் இறந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி மனைவி மனு
x
தினத்தந்தி 9 Oct 2017 11:00 PM GMT (Updated: 9 Oct 2017 9:09 PM GMT)

துபாயில் இறந்த கணவரின் உடலை மீட்டு தரக்கோரி பெரம்பலூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனைவி மனு கொடுத்தார்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பிரதான கூட்டரங்கில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை தாங்கினார். இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் நேரடியாக கலெக்டரிடம் 283 மனுக்கள் கொடுத்தனர். மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து மனுதாரருக்கு தெரியப்படுத்துமாறு சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை நடுத்தெருவை சேர்ந்த ஜோதிமணி என்பவர் தனது மகன், மகளுடன் உறவினர்களை அழைத்து கொண்டு கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார். அந்த மனுவில், எனது கணவர் செங்கமலை துபாயில் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்த நிலையில் செங்கமலை இறந்து விட்டதாக அவருடன் வேலை பார்க்கும் சகஊழியர்கள் எங்கள் குடும்பத்தினரை செல்போனில் தொடர்பு கொண்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவித்தனர்.

எனது கணவர் இறந்த சம்பவம் கேட்டு பெரும் அதிர்ச்சிக்கு உள்ளானேன். எனது மகன் 11-ம் வகுப்பும், மகள் 6-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். ஏழ்மையான குடும்பம் என்பதால் எனது கணவரின் உடலை எப்படி சொந்த ஊருக்கு கொண்டு வருவது என தெரியவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் சார்பில் உரிய நடவடிக்கை எடுத்து துபாயில் இறந்த எனது கணவரின் உடலை மீட்டு சொந்த ஊருக்கு கொண்டு வர வேண்டும் என்று கூறியிருந்தார்.

பருத்தி செடிகளை நாசம் செய்தவர்கள் மீது...

பெரம்பலூர் மாவட்டம் எசனை பாப்பாங்கரை பகுதியில் சேதமடைந்த சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதியை சேர்ந்த மக்கள் மனு கொடுத்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கொட்டரை கிராமத்தை சேர்ந்த ராணி (வயது 38), காய்ந்துபோன பருத்தி செடிகளை கையில் வைத்தபடி தனது கணவருடன் வந்து மனு கொடுத்தார். அதில், கொட்டரை கிராமத்தில் எங்களுக்கு சொந்தமான பூர்வீக நிலத்தில் தற்போது பருத்தி பயிரிட்டு பராமரித்து வந்தோம். இந்த நிலையில் சிலர் முன்விரோதத்தை மனதில் வைத்து கொண்டு எனது நிலத்தில் வளர்ந்த பருத்தி செடிகளின் மீது களைக்கொல்லியை அடித்து நாசம் செய்து விட்டனர். இதனால் பருத்தி செடிகள் முழுவதும் காய்ந்து விட்டன. எனவே பருத்தி செடிகளை நாசம் செய்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சேதமடைந்த பருத்திக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

மாமனார்-மாமியார் மனு

பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டபுரத்தை சேர்ந்த கிருஷ்ணன், அவரது மனைவி மல்லிகா ஆகியோர் தங்களது பேரக்குழந்தைகளுடன் வந்து மனு அளித்தனர். அதில், எனது மருமகள் துர்கா (23) கடந்த சில மாதங்களுக்கு முன்பு சந்தைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். அதன் பின்னர் வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை. இது தொடர்பாக மங்களமேடு போலீசில் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. துர்காவை பார்க்க முடியாமல் அவரது குழந்தைகள் தினமும் அழுது கொண்டே இருக்கின்றனர். எனவே எங்களது மருமகளை கண்டுபிடித்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

வடக்கேரியை தூர்வார கோரிக்கை

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கீழப்பெரம்பலூர் வடக்கேரி பாசன விவசாயிகள் திரண்டு வந்து அளித்த மனுவில், கீழப்பெரம்பலூர் வடக்கேரியை குடிமராமத்து திட்டத்தின் கீழ் விவசாயிகள் தூர்வார அனுமதி தர வேண்டும். புதர் மண்டி கிடக்கும் அதன் வரத்து வாய்க்காலையும் தூர்வார வேண்டும். பழுதடைந்த மதகுகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா காரை ராமலிங்கம் நகரில் வசித்து வரும் ஒரு குறிப்பிட்ட தரப்பை சேர்ந்த மக்களுக்கு சாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி அப்பகுதி பொதுமக்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் சாந்தா, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என பதில் கூறினார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஸ்ரீதர், மகளிர் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி உள்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story