வெடிகுண்டுகள் வீசி 3 ரவுடிகள் படுகொலை நண்பர்களுடன் மது அருந்தி வெறிச்செயல்


வெடிகுண்டுகள் வீசி 3 ரவுடிகள் படுகொலை நண்பர்களுடன் மது அருந்தி வெறிச்செயல்
x
தினத்தந்தி 20 Oct 2017 5:15 AM IST (Updated: 20 Oct 2017 3:31 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் தீபாவளி தினத்தன்று நண்பர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்த 3 ரவுடிகளை மர்மகும்பல் வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் படுகொலை செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை முத்திரையர்பாளையம் ஜீவா தெருவை சேர்ந்தவர் ஞானசேகர் என்ற நாய் சேகர் (வயது 25). காந்திதிருநல்லூர் பிள்ளையார் கோவில் வீதியை சேர்ந்தவர் சதீஷ் (21). சண்முகாபுரத்தை சேர்ந்த ஜெரால்டு (22) இவர்கள் மூவரும் நண்பர்கள். ரவுடிகளான இவர்கள் 3 பேர் மீதும் கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

தீபாவளியன்று இவர்கள் 3 பேரும் தங்களது நண்பர்களான சாரணப்பேட்டையை சேர்ந்த ரங்கராஜ், ரகு மற்றும் ஒருவருடன் மேட்டுப்பாளையம் ராம்நகர் முதல் குறுக்கு தெருவில் உள்ள பீரோ தயாரிக்கும் நிறுவனத்தில் அமர்ந்து நள்ளிரவு வரை மது அருந்தினர்.

அப்போது அங்கு மோட்டார்சைக்கிள்களில் வீச்சரிவாள் மற்றும் கத்திகளுடன் வந்த மர்ம கும்பல் அவர்களை சுற்றி வளைத்தது. இதைத்தொடர்ந்து 6 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். இதனால் அவர்கள் மீது வெடிகுண்டுகளை எடுத்து வீசினர். அதில் ஒரு குண்டு ஜெரால்டின் மேல் பட்டு வெடித்தது. இதனால் அவரது தலை சிதறியது. இருப்பினும், அந்த கும்பல் ஜெரால்டை சுற்றி வளைத்து வெட்டியது.

இதேபோல் சதீஷ், ஞானசேகர் ஆகியோரையும் சரமாரியாக வெட்டினர். இதில் 3 பேரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். ரங்கராஜ், ரகு ஆகியோருக்கும் அரிவாள் வெட்டு விழுந்தது. இதைத்தொடர்ந்து மர்மகும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் மேட்டுப்பாளையம் போலீசார் விரைந்து சென்று காயமடைந்த ரங்கராஜ், ரகு ஆகியோரை மீட்டு சிகிச்சைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.

மேலும், சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். முதற்கட்ட விசாரணையில், பாரதிபுரத்தை சேர்ந்த மார்ட்டின், லாரன்ஸ், ஸ்டீபன் மற்றும் சிலர் இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டிருப்பதும், மாமூல் வசூலிப்பதில் ஏற்பட்ட போட்டியில் கொலைகள் நடந்து இருப்பதும் தெரியவந்தது.

ஐ.ஆர்.பி.என். போலீஸ்காரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த மார்ட்டின் அந்த பகுதியில் மாமூல் வசூலித்துவந்தார். கொலை வழக்கில் அவர் ஜெயிலுக்கு சென்றதால் ஞானசேகர் தனது கூட்டாளிகளுடன் மாமூல் வசூலித்துள்ளார்.

இதை மார்ட்டினின் தம்பி தட்டிக்கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு மார்ட்டின் ஜெயிலில் இருந்து வந்தார். இதையடுத்து ஞானசேகர் மற்றும் அவரது கூட்டாளிகளை தீர்த்துக்கட்ட மார்ட்டின் தரப்பினர் திட்டம் தீட்டினர். அதன்படி தீபாவளியன்று இந்த கொலை சம்பவத்தை அரங்கேற்றியுள்ளனர்.

கொலையாளிகளை பிடிக்க 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மார்ட்டின், லாரன்ஸ், ஸ்டீபன் ஆகியோர் போலீஸ் பிடியில் சிக்கியிருப்பதாகவும் கூறப்படுகிறது. அவர்களது கூட்டாளிகள் சிலரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story