“சினிமாவில் பொய்யான விஷயங்களை பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது?” பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி


“சினிமாவில் பொய்யான விஷயங்களை பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது?” பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
x
தினத்தந்தி 20 Oct 2017 11:15 PM GMT (Updated: 20 Oct 2017 9:47 PM GMT)

“சினிமாவில் பொய்யான விஷயங்களை பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது“ என்று கூறிய மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், ‘மெர்சல்‘ சினிமா வசனத்துக்கு தனது எதிர்ப்பை தெரிவித்தார்.

நாகர்கோவில்,

திரைப்படத்துறையில் பிரபலமாகி அரசியலுக்கு வந்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற எம்.ஜி.ஆரின் சாதனையை உளமாற, மனமாற பாராட்டுகிறேன். எந்த துறையைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஜனநாயக வழியில் அரசியலுக்கு வர வேண்டும். ஆனால் தான் சார்ந்திருக்கக்கூடிய ஒரு துறையை தவறாகப் பயன்படுத்தி, மக்கள் மத்தியில் தவறான விஷயங்களை கொண்டு சென்று, அரசியல் ஆதாயம் தேடக்கூடாது.

தற்போது நடிகர் விஜய் நடித்து வெளியாகியுள்ள ‘மெர்சல்‘ படத்தில் அரசியல் விமர்சனங்களை தொடங்கி வைத்திருப்பது சினிமாவுக்கும் நல்லதல்ல, அரசியலுக்கும் நல்லதல்ல. சினிமா பார்க்க வரக்கூடிய ரசிகர்கள் அந்தந்த நடிகருடைய நடிப்பு திறமைக்காக வருகிறார்களே தவிர, அரசியலுக்காக வருவது இல்லை.

மெர்சல் படத்தில் இடம்பெற்றுள்ள பல வசனங்கள் உண்மைக்கு மாறான, தவறான கண்ணோட்டத்தை கொடுக்கக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக கூறுகிறார்கள். இது வருத்தத்துக்குரிய விஷயம். சம்பந்தப்பட்டவர்கள் அதுபோன்ற வசனங்களை நீக்க நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். தவறான சிந்தனையை பரப்பும் செயலை சம்பந்தப்பட்டவர்கள் நிறுத்தியாக வேண்டும். அரசியலுக்கு வரவேண்டும் என்றால் நேரடியாக விஜய் அரசியலுக்கு வரட்டும். யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரட்டும். உண்மையான விஷயங்களை மறைக்கக்கூடிய வகையில் கருத்துக்கள் பரப்பக்கூடாது.

கமல்ஹாசன், விஜய் போன்ற நடிகர்கள் அரசியலுக்கு வருவது தொடர்பான கருத்துக்களை நான் தவறு என்று சொல்லமாட்டேன். ஆனால், நீங்கள் சினிமாவில் பொய்யான ஒரு விஷயங்களை பரப்புவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

நடிகர் கமல்ஹாசன் மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கை தொடர்பாக தற்போது கூறிய கருத்தை நான் அறிந்தேன். தற்போதைய கருத்துக்கு நாளை அவர் மன்னிப்பு கேட்பார். பணமதிப்பிழப்பு பற்றி ஆரம்பத்தில் பாராட்டினார்கள். ஜி.எஸ்.டி. பற்றி பாராட்டினார்கள். தற்போது தவறு என்று சொன்னால் ஒரு அரசியல்வாதியின் நிலைப்பாடு என்ன? அரசியலில் ஒரு கருத்தை சொன்னால் ஆழ யோசித்துச் சொல்ல வேண்டும். நேற்று சொன்னதற்கு இன்று மன்னிப்பு கேட்கிறேன் என்று இருக்கக்கூடாது.

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பில் சில மாற்றங்களை கொண்டு வருவது பின்னடைவு கிடையாது. அது பாராட்டப்பட வேண்டிய விஷயம்தானே. அதில் குறைசொல்ல என்ன இருக்கிறது? கர்நாடகத்தில் விஜய் ரசிகர்கள் தாக்கப்பட்டதாக கூறுகிறீர்கள். கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிரான உணர்வுகளை பரப்புவதில் அங்குள்ள காங்கிரஸ் அரசு கண்ணும், கருத்துமாக செயல்படுகிறது.

காங்கிரஸ், ஜனதா தளம் கட்சிகளின் ஆட்சிக்காலத்தில் ஏறக்குறைய 20 ஆண்டுகள் திறக்க முடியாமல் இருந்த திருவள்ளுவர் சிலையை கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சியில் திறந்தோம். ஒரு கன்னடர்களும் அதை எதிர்க்கவில்லை. யாரும் போராட்டம் நடத்தவில்லை. அதையும் ஒரு அரசுதான் செய்தது. தற்போது பிரச்சினையே இல்லாத விஷயத்தை பிரச்சினையாக்குகிறார்கள் என்றால் அவர்களின் அரசியலுக்கு ஒரு சூழ்நிலை தேவைப்படுகிறது.

மத்திய அரசின் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்த தி.மு.க. தலைவர் கருணாநிதி திடமாக இருந்தபோது எதிர்ப்புகள் வந்தது உண்டா? ஜெயலலிதா உயிரோடு இருக்கும் வரை இதுபோன்ற சந்தேகங்கள், எதிர்ப்புகள் உண்டா? பலம் பொருந்திய தலைமை இல்லாமல் போகும்போது திடீர் தலைவர்கள் உருவாவதற்கான முயற்சி இது. அந்த முயற்சியில் யார் அதிகமாக ‘நெகட்டிவ்‘ கருத்துகளை பேசுவது என்பதில் பெரிய போட்டி நடக்கிறது. அதனால் மத்திய அரசின் திட்டங்கள் ஒன்றும் வரக்கூடாது என்று பேசுகிறார்கள். தமிழக ஆட்சியிலும் திடமான தலைமை இல்லை என்பது நூற்றுக்கு நூறு உண்மை.

தமிழகத்துக்கு நவோதயா பள்ளிகளை கேட்டால் கொடுக்கக்கூடிய அளவுக்கு மத்திய அரசு தயாராக இருக்கிறது. கடந்த அண்டு அறிவிக்கப்பட்ட 62 பள்ளிக்கூடங்களில் குறைந்தபட்சம் 10 பள்ளிக்கூடங்களை தந்தாக வேண்டும் என்று மத்திய கல்வித்துறை மந்திரியிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். ஆனால் ஒன்றுகூட வரக்கூடாது என்று தி.மு.க. கூறுகிறது. கிராமங்கள் உருப்படக்கூடாது, கிராமத்து ஏழைகள், நடைபாதையில் செருப்புத் தைக்கும் குழந்தைகள் படித்துவிடக்கூடாது என்பதில் அவர்கள் கண்ணும், கருத்துமாக உள்ளனர். படிக்க வைக்க நாங்கள் நினைக்கிறோம்.

டெங்கு பரவக்கூடிய மாவட்டங்களில் குமரியும் ஒன்று. இந்த மாவட்டத்தில் டெங்குவை ஓரளவு கட்டுப்படுத்தி இருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் சொல்கிறார்கள். கொசு எங்கெல்லாம் இருக்கிறது என்று டார்ச் லைட் அடித்து பார்த்து கலெக்டர் ஆய்வு செய்கிறார். இது பாராட்ட வேண்டிய விஷயம். ஆனால் இதை ஆரம்பத்திலேயே செய்திருக்கலாம். கொசு உற்பத்தியாகும் முன்பே செய்திருக்கலாம். மாநில அரசு பல முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அதற்கு நமது பாராட்டுக்கள்.

எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தின் மையப்பகுதியில் வரவேண்டும். மதுரைக்கு இதுவரை எதுவுமே கொடுக்கப்படவில்லை. எனவே இதையெல்லாம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று நான் கூறிவருகிறேன்.

பொறையாறில் பணிமனை இடிந்து விழுந்து 9 பேர் இறந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன. பணிமனைகள் மட்டும் கிடையாது. பஸ் நிலையம் இடிந்து விழுந்து 6 பேர் இறந்திருக்கிறார்கள். கட்டிடங்கள் விஷயத்தில் தமிழக அரசு இனி தனி கவனம் செலுத்த வேண்டும்.

மு.க.ஸ்டாலின் நவம்பர் மாதத்தில் எழுச்சி பயணம் தொடங்க இருப்பதாக கூறுகிறீர்கள். தி.மு.க.வுக்கு பலம் இல்லை. தி.மு.க.வை மக்கள் மறந்து விட்டார்கள். நமக்கு நாமே என்ற பயணம் ஒன்று நடந்தது.

அதையே மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இருப்பினும் சட்டசபை தேர்தலில் அதிக இடங்கள் கிடைத்தது என்றால் கருணாநிதிக்கென உள்ள மரியாதையால்தான்.

இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். 

Next Story