பெட்ரோல் பங்க்-தனியார் கட்டிட உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்


பெட்ரோல் பங்க்-தனியார் கட்டிட உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம்
x
தினத்தந்தி 28 Oct 2017 6:44 AM GMT (Updated: 28 Oct 2017 6:44 AM GMT)

டெங்கு கொசு உற்பத்தியாவதற்கு காரணமாக இருந்ததாக பெட்ரோல் பங்க்-தனியார் கட்டிட உரிமையாளர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

பெரம்பலூர்,

பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க்குகள், அரசு மற்றும் தனியார் கட்டிடங்களில் டெங்கு கொசு உருவாக வாய்ப்புள்ளதா? என மாவட்ட கலெக்டர் சாந்தா நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது துறைமங்கலம் பகுதியில் அமைந்துள்ள பெட்ரோல் பங்க் மற்றும் அதன் அருகில் கட்டப்பட்டு வரும் தனியார் கட்டிடத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, அங்கு டெங்கு கொசு உற்பத்தியாகும் வகையில் சுற்றுப்புறங்களையும், கட்டிடங்களையும் பராமரிப்பின்றி வைத்திருந்தது தெரிய வந்தது.

அதன்பேரில், பெட்ரோல் பங்க் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரமும், தனியார் கட்டிட உரிமையாளருக்கு ரூ.1 லட்சமும் அபராதமாக விதித்து கலெக்டர் உத்தரவிட்டார். மீண்டும் அடுத்த ஆய்விற்கு அலுவலர்கள் வருகை தரும்போது இதுபோன்ற சூழல் இருக்கக்கூடாது என்றும் அவர்களை எச்சரித்தார்.

இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர்(ஊரக வளர்ச்சி முகமை) ஸ்ரீதர், வருவாய் கோட்டாட்சியர் கதிரேசன், நகராட்சி ஆணையர் முரளி, தாசில்தார் பாலகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர். 

Next Story