உதிர்ந்த இலைகளில் விழிப்புணர்வு பயணம்


உதிர்ந்த இலைகளில் விழிப்புணர்வு பயணம்
x
தினத்தந்தி 29 Oct 2017 6:30 AM GMT (Updated: 29 Oct 2017 5:53 AM GMT)

“இயற்கை நமக்கு வழங்கி கொண்டிருக்கும் எந்த பொருளையும் வீணானது என்று ஒதுக்கவிட முடியாது. அவை அனைத்துமே மறுசுழற்சி செய்யத்தக்கவை.

“இயற்கை நமக்கு வழங்கி கொண்டிருக்கும் எந்த பொருளையும் வீணானது என்று ஒதுக்கவிட முடியாது. அவை அனைத்துமே மறுசுழற்சி செய்யத்தக்கவை. ஒன்றின் மூலம் மற்றொன்று பயன்பெறும் வகையிலேயே இயற்கையின் சுழற்சி அமைந்திருக்கிறது. அதனால் வீணான பொருட்கள் என்று எதையும் குப்பையில் போடவும் கூடாது. அவைகளை எரிக்கவும் கூடாது. அதில் இருந்து வெளிப்படும் புகை காற்றில் கலந்து சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்திவிடும்” என்கிறார், அதிதி தியோதார்.

சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர் மரத்தில் இருந்து உதிர்ந்து விழும் ஒரு இலையைக்கூட எரிக்கக்கூடாது என்பதில் பிடிப்பாக இருக்கிறார். இலைகளை எரிப்பதால் ஏற்படும் பாதகங்களை பற்றி இணையதளம் வாயிலாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார். கடந்த ஓராண்டில் மட்டும் மரங்களில் இருந்து உதிர்ந்து விழுந்த இலைகளை 5 ஆயிரம் மூட்டைகளில் சேகரித்து வைத்திருக்கிறார். அவைகளை மட்கச் செய்து வீட்டு தோட்டங்களுக்கு உரமாக பயன்படுத்தி வருகிறார். உதிர்ந்த இலைகளை சேகரிப்பதற்கான நோக்கம் குறித்து அவர் சொல்ல கேட்போம்.

“மரங்களில் இருந்து உதிரும் இலைகள் சாலைகளில் குப்பைகளாக குவிந்து கிடக்கின்றன. துப்புரவு செய்பவர்களும், மற்றவர்களும் குவிந்து கிடக்கும் இலைகளை தீயிட்டு கொளுத்திவிடுகிறார்கள். அதனால் அந்த பகுதியில் புகை மூட்டம் ஏற்பட்டு சுற்றுச்சூழல் மாசுபடுகிறது. உதிர்ந்த இலைகளை எரிப்பதற்கு பல நாடுகள் தடை விதித்திருக்கின்றன. அந்த இலைகள் எரியும்போது காற்று மாசுபடுகிறது. அதனால் நமது உடல் நலனும் பாதிப்புக்குள்ளாகிறது. எரியும் இலைகளில் இருந்து வெளிப்படும் புகையில் பல நச்சு துகள்கள், வாயுக்கள் கலந்துள்ளது. அவை நுரையீரல் திசுகளுக்கு கேடு விளைவிப்பவை. இருமல், மூச்சுத் திணறல், நெஞ்சு வலி, ஆஸ்துமா போன்ற நீண்ட கால சுவாச பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமாகிவிடுகிறது. அந்த புகையில் இருந்து வெளியாகும் கார்பன் மோனாக்சைடு ரத்தத்தில் உறிஞ்சப்படுகிறது. அதனால் சுவாசத்திற்குள் கலக்கும் ஆக்சிஜனின் அளவும் குறைந்துவிடுகிறது. ரத்த சிவப்பு அணுக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.

உதிர்ந்த இலைகள் 80 சதவீதம் வரை ஊட்டச்சத்துக்களை கொண்டிருக்கின்றன. அவை மண்ணில் இருந்து பெறப்பட்டவை. மீண்டும் மண்ணுக்கே உரமாக பயன்பட வேண்டும். ஆனால் நாமோ நன்மை பயக்கும் இலைகளை சுற்றுச்சூழலுக்கு எமனாக மாற்றிக்கொண்டிருக்கிறோம். அவைகளை எரிக்கும்போது மாசுபாட்டை ஏற்படுத்துவதோடு அல்லாமல் மண்ணிற்கு செல்ல வேண்டிய ஊட்டச்சத்துக்களையும் அழித்துக் கொண்டிருக்கிறோம்” என்று ஆதங்கப்படுகிறார்.

அதிதி, புனேவை சேர்ந்தவர். கணக்கு பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். இலைகள் எரிக்கப்படுவதை கட்டுப்படுத்துவதற்காக முழு மூச்சுடன் செயல்பட்டு வருகிறார். தற்போது குளிர்காலம் நெருங்கி கொண்டிருப்பதால் குழுக்கள் அமைத்து களப்பணியாற்றி வருகிறார்.

“குளிர்காலங்களில் மரங்களில் இருந்து இலைகள் உதிர்வது இயற்கையானது. அதிலும் நவம்பர் முதல் ஏப்ரல் வரை இலைகள் உதிர்வு அதிகமாக இருக்கும். இலையுதிர் காலங்களில் இலைகளை சேகரிக்கும்போது அவைகளை மட்க வைப்பதும் சுலபமானது. நீரின் துணை கொண்டு ஆறு மாதங்களுக்குள் மட்க வைத்து, உரமாக பயன்படுத்தி விடலாம். உலர்ந்த இலைகளை யாராவது குவித்து வைத்திருந்தால் அதனை நான் பயன்படுத்திக்கொள்கிறேன் என்று கூறி வருகிறேன். ஆரம்பதில் என் முயற்சிக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. ஆனால் இப்போது நிறைய பேர் தங்கள் வீட்டு மரங்களின் இலைகளை பாதுகாக்க தொடங்கி விட்டார்கள். என்னிடம் ஒப்படைக்கவும் செய்கிறார்கள். பேஸ்புக், வாட்ஸ் அப் மூலமும் நிறைய பேர் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். அவர்களிடம் இலைகளை எனக்கு தானமாக கொடுங்கள் என்று கூறி வருகிறேன். அதனால் உதிர்ந்த இலைகளை சேகரிப்பது எளிதாகி விட்டது. என்னிடன் இணையதள தொடர்பில் இருப்பவர்களிடம் வீட்டு தோட்டம் அமைப்பதற்கு ஊக்கப்படுத்தி வருகிறேன். அதற்கு உதிர்ந்த இலைகளையே உரமாக பயன்படுத்தவும் வலியுறுத்துகிறேன். அவர்களும் குப்பை என்று ஒதுக்கிய இலைகளில் உள்ளடங்கி இருக்கும் ஊட்டச்சத்துக்களை புரிந்து கொள்ளத் தொடங்கி விட்டார்கள்” என்கிறார். 

Next Story