அக்காவுக்கு பெரிய கொலுசு வாங்கி கொடுத்ததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை


அக்காவுக்கு பெரிய கொலுசு வாங்கி கொடுத்ததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 23 Nov 2017 1:00 PM IST (Updated: 23 Nov 2017 12:38 PM IST)
t-max-icont-min-icon

திருப்பூர் அருகே தனக்கு சிறிய கொலுசு வாங்கி விட்டு அக்காவுக்கு பெரிய கொலுசு வாங்கிக்கொடுத்ததால் சிறுமி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

அனுப்பர்பாளையம்,

திருப்பூர் திருமூர்த்தி நகரை அடுத்த நேருநகரை சேர்ந்தவர் செல்வம் (வயது 42). இவருடைய மனைவி இந்திரா (37). இவர்களுடைய மூத்த மகள் பிரியங்கா (18) மற்றும் இளைய மகள் சோனியா (15) குடும்பத்தில் 4 பேரும் பனியன் நிறுவனத்தில் தொழிலாளர்களாக வேலை பார்த்து வந்தனர்.

தீபாவளியையொட்டி மகள்களுக்கு கொலுசு வாங்கி தர அவர்களுடைய பெற்றோர் முடிவு செய்தனர். இதையடுத்து தீபாவளிக்கு 2 மகள்களையும் நகை கடைக்கு அழைத்து சென்ற அவர்கள் இருவருக்கும் வெள்ளி கொலுசு வாங்கி கொடுத்துள்ளனர். இதில் மூத்த மகளான பிரியங்காவுக்கு கொலுசு கொஞ்சம் பெரிதாகவும், சோனியாவுக்கு கொலுசு சிறியதாகவும் வாங்கி கொடுத்ததாக தெரிகிறது. இதனால் சோனியா அக்காவுக்கு மட்டும் பெரிய கொலுசு வாங்கி கொடுத்துள்ளர்கள். ஆனால் எனக்கு கொலுசு சிறியதாக உள்ளது என்று கூறி வருத்தமடைந்துள்ளார்.

இதன் காரணமாக கடந்த சில நாட்களாக சோனியா சோகமாகவே இருந்து வந்துள்ளார். மேலும் அக்கா தங்கைக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் வாழ்க்கையில் விரக்தியடைந்த சோனியா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து தகவலறிந்த அனுப்பர்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோனியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருப்பூரில் அக்காவுக்கு கொலுசு பெரியதாக வாங்கி கொடுத்ததால் தங்கை தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story