அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ் பொருத்த கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து


அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ் பொருத்த கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து
x
தினத்தந்தி 29 Nov 2017 10:45 PM GMT (Updated: 2017-11-30T00:31:51+05:30)

அரசு கேபிள் டி.வி. செட்டாப் பாக்ஸ் பொருத்த ஆபரேட்டர்கள் கூடுதல் கட்டணம் வசூலித்தால் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பரமக்குடி,

பரமக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு கேபிள் டி.வி. டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ் வழங்கும் விழா பரமக்குடியில் நடந்தது. இந்த விழாவுக்கு தாலுகா டிஜிட்டல் கேபிள் டி.வி. வினியோகஸ்தர் அப்துல் மாலிக் தலைமை தாங்கினார். தொழில்நுட்ப மேலாளர் மங்களநாதன், நிர்வாக மேலாளர் குமரேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கேபிள் டி.வி. ஆபரேட்டர் கோவிந்தராஜூ அனைவரையும் வரவேற்றார். விழாவில் அரசு கேபிள் டி.வி. மாவட்ட துணை மேலாளர் செய்யது முகமது கலந்து கொண்டு டிஜிட்டல் செட்டாப் பாக்சுகளை ஆபரேட்டர்களிடம் வழங்கினார்.

தொடர்ந்து அவர் பேசியதாவது:– தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் அரசு கேபிள் டி.வி. டிஜிட்டல் செட்டாப் பாக்ஸ்களை பொதுமக்களுக்கு சிறந்த முறையில் கேபிள் டி.வி.ஆபரேட்டர்கள் வழங்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் இந்த செட்டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது. சர்வீஸ் கட்டணமாக ரூ.175 மற்றும் ஜி.எஸ்.டி. வரி ஆகியவை மட்டும் தான் வாங்க வேண்டும்.

கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் செட்டாப் பாக்ஸ் பொருத்த கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக தகவல் தெரிந்தால் அவர்கள் மீது காவல்துறை மூலம் வழக்குப்பதிவு செய்வதுடன் உரிமமும் ரத்து செய்யப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை எவ்வித புகாரும் வரவில்லை.

தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சரின் சொந்த மாவட்டமாக இருப்பதால் எந்த குறையுமின்றி சிறப்பாக செயல்பட வேண்டும். பொதுமக்கள் செட்டாப் பாக்சில் குறைபாடுகள் இருந்தால் உடனடியாக மாற்றம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். விழாவில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் பார்த்திபனூர் வினோத்குமார், ராதாகிருஷ்ணன், நெடுமாறன், இளமாறன், ஞானசேகரன், பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story