விமான நிலைய விரிவாக்கத்திற்கு எங்கள் பகுதியில் நிலம் கையகப்படுத்தக்கூடாது பொதுமக்கள் மனு


விமான நிலைய விரிவாக்கத்திற்கு எங்கள் பகுதியில் நிலம் கையகப்படுத்தக்கூடாது பொதுமக்கள் மனு
x
தினத்தந்தி 29 Nov 2017 11:00 PM GMT (Updated: 29 Nov 2017 8:31 PM GMT)

விமான நிலைய விரிவாக்கத்திற்கு எங்கள் பகுதியில் நிலம் கையகப்படுத்தக்கூடாது என்று பட்டத்தம்மாள் தெரு பொதுமக்கள் திருச்சி வந்த முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் மனு கொடுத்தனர்.

திருச்சி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி வந்தார். திருச்சி விமான நிலையத்தில் அவருக்கு அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி, துரைக்கண்ணு, எம்.பி.க்கள் வைத்திலிங்கம், டி. ரத்தினவேல், குமார், மருதராஜா, எம்.எல்.ஏ.க்கள் பரமேஸ்வரி, சந்திரசேகர், திருச்சி மாவட்ட கலெக்டர் கே. ராஜாமணி உள்பட அதிகாரிகள் மற்றும் பிரமுகர்கள் சால்வை அணிவித்தும், மலர்கொத்து கொடுத்தும் வரவேற்பு அளித்தனர். விமான நிலைய வளாகத்தில் மேள தாளம் முழங்க கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

அப்போது முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் விமான நிலையம் அருகில் உள்ள பகுதியான பட்டத்தம்மாள் தெருவை சேர்ந்த பொதுமக்கள் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக பட்டத்தம்மாள் தெருவில் வசித்து வரும் எங்களது வீடுகளை காலி செய்து விட்டு நிலத்தை ஒப்படைக்கும்படி அதிகாரிகள் கூறி உள்ளனர். நாங்கள் வசிக்கும் பகுதிக்கு 1973-ம் ஆண்டு அப்போது இருந்த ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரால் பட்டா வழங்கப்பட்டு உள்ளது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறோம். அதிகாரிகள் எங்கள் பகுதி இடத்தை கையகப்படுத்துவதற்காக அளக்க வந்ததை பார்த்து ஏற்பட்ட அதிர்ச்சியில் ஒருவர் இறந்து விட்டார். பட்டத்தம்மாள் தெருவில் நிலம் கையகப்படுத்தினால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே விமான நிலைய விரிவாக்கத்திற்காக இந்த பகுதியில் நிலம் கையகப்படுத்தும் திட்டத்தை கைவிடும்படி கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

விமான நிலைய வரவேற்பு முடிந்த பின்னர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கார் மூலம் தஞ்சாவூருக்கு புறப்பட்டு சென்றார். முதல்-அமைச்சர் வருகையையொட்டி திருச்சி விமான நிலையம், புதுக்கோட்டை சாலை, டி.வி.எஸ். டோல்கேட், சுற்றுலா மாளிகை ஆகிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. 

Next Story