திருவொற்றியூரில் கீழே கிடந்த ரூ.21 ஆயிரத்தை போலீசில் ஒப்படைத்த மாணவன்
திருவொற்றியூரில் பஸ் நிலையம் அருகே கீழே கிடந்த ரூ.21 ஆயிரத்தை எடுத்த பள்ளி மாணவன் அதனை போலீசில் ஒப்படைத்தான். போலீசார் மாணவனின் நேர்மையை பாராட்டி பரிசுகளை வழங்கினர்.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் தெரு சத்தியமூர்த்தி நகரில் வசித்து வருபவர் தாத்தையா. இவருடைய மனைவி பிரசன்னகுமாரி. இவர்கள் இருவரும் திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களாக வேலைபார்த்து வருகின்றனர். இவர்களுடைய மகன் ஜிப்சன் (வயது 14). இவர் திருவொற்றியூர் பெரியார் நகரில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் 9–ம் வகுப்பு படித்து வருகிறான்.
மாணவன் ஜிப்சன் கடந்த 9–ந்தேதி காலை பள்ளிக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக எல்லையம்மன் கோவில் பஸ் நிலையம் சென்றான். அப்போது பஸ் நிலையம் அருகே கீழே ரூபாய் நோட்டு கட்டு ஒன்று கிடந்தது. ஜிப்சன் அதனை எடுத்து பார்த்த போது அதில் ரூ.21 ஆயிரம் இருந்தது. உடனடியாக அவன் அந்த பணத்தை எடுத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றான். பின்னர் அவன் பள்ளி தலைமை ஆசிரியர் பஞ்சநாதனிடம் சென்று நடந்ததை எடுத்துக்கூறி பணத்தை அவரிடம் கொடுத்தான்.
இதையடுத்து தலைமை ஆசிரியர் மாணவன் ஜிப்சனை தன்னுடன் அழைத்துக்கொண்டு, திருவொற்றியூர் போலீஸ் நிலையம் சென்றார். அவர் அங்கிருந்த போலீசாரிடம் மாணவன் கண்டெடுத்த ரூ.21 ஆயிரத்தை ஒப்படைத்தார்.
இதையடுத்து மாணவன் ஜிப்சன் படிக்கும் பள்ளிக்கு நேரில் சென்ற திருவொற்றியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிதம்பரம் முருகேசன் மற்றும் போலீசார், மாணவனின் நேர்மையை பாராட்டி அவனுக்கு பரிசுகளை வழங்கினர். அப்போது மாணவனின் பெற்றோரும், பள்ளி தலைமை ஆசிரியரும் உடன் இருந்தனர்.
பணத்தை தவற விட்டவர் உரிய ஆதாரத்துடன் காவல் நிலையத்தை அணுகினால் அவரிடம் பணம் ஒப்படைக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர்.