வயிற்று வலியால் துடித்த பிளஸ்–2 மாணவிக்கு குழந்தை பிறந்ததால் பரபரப்பு


வயிற்று வலியால் துடித்த பிளஸ்–2 மாணவிக்கு குழந்தை பிறந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 16 Dec 2017 5:15 AM IST (Updated: 16 Dec 2017 12:36 AM IST)
t-max-icont-min-icon

வயிற்று வலியால் துடித்த பிளஸ்–2 மாணவிக்கு குழந்தை பிறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது கர்ப்பத்துக்கு காரணமானவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி,

காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காட்டை சேர்ந்த 17 வயது மாணவி, பூந்தமல்லியில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்–2 படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்த மாணவி, திடீரென வயிற்று வலியால் துடித்தார். இதனால் பயந்து போன அவரது தாயார், பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு மாணவியை அழைத்து சென்றார்.

அங்கு மாணவியை பரிசோதனை செய்த டாக்டர்கள், மாணவி தற்போது 8 மாத கர்ப்பிணியாக இருப்பதாகவும், அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தனர். இதை கேட்டு மாணவியின் தாயார் அதிர்ச்சி அடைந்தார்.

உடனடியாக மாணவியை சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவிக்கு நேற்று அழகான ஆண் குழந்தை பிறந்தது. குறை மாதத்தில் பிறந்த குழந்தை என்பதால் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுபற்றி பூந்தமல்லி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு சென்ற போலீசார், மாணவி மயக்கத்தில் இருந்ததால் அவரது தாயாரிடம் விசாரித்தனர்.

அதில் அவர், எனது மகளிடம் வயிறு வீங்கி இருப்பது போல் உள்ளதே என கேட்டதற்கு, அவள் வயிற்றில் கட்டி இருப்பதாகவும், அது சரியாகி விடும் என்றும் கூறியதால் அதை நான் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை என்று கூறினார். பள்ளியில் சகதோழிகளிடமும் இதையே மாணவி கூறி இருந்ததாக தெரிகிறது.

இதற்கிடையில் மருத்துவமனையில் மயக்கம் தெளிந்த மாணவியிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர், தான் வீட்டில் தனியாக இருந்தபோது மர்மநபர் ஒருவர் வீடு புகுந்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், பயந்து போய் இதை தாயாரிடம் சொல்லாமல் மறைத்ததாகவும், ஆனால் தான் கர்ப்பமாகி இருப்பது பற்றி தனக்கு தெரியவில்லை எனவும் கூறியதாக போலீசார் தெரிவித்தனர்.

தற்போது மாணவி மிகவும் பலவீனமாக இருப்பதால் மேற்கொண்டு அவரிடம் விசாரணை நடத்த முடியவில்லை எனவும், அவர் கூறுவது உண்மையா?, மாணவியின் கர்ப்பத்துக்கு காரணம் யார்? என்பது தொடர்பாக விசாரித்து வருவதாகவும் போலீசார் கூறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story