பாகற்காயும் சர்க்கரை நோயும்


பாகற்காயும் சர்க்கரை நோயும்
x
தினத்தந்தி 16 Dec 2017 2:50 PM IST (Updated: 16 Dec 2017 2:50 PM IST)
t-max-icont-min-icon

பாகற்காய் சாப்பிடுவதால் நாம் உட்கொள்ளும் பிற நவீன மருந்துகளின் செயல்பாட்டில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.

கசப்புச் சுவை கொண்டது என்றாலும் பல இனிப்பான ஆரோக்கிய நன்மைகளை அள்ளி வழங்கக்கூடியது, பாகற்காய்.

குறிப்பாக, சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் ஏற்றதாக பாகற்காய் பரிந்துரைக்கப்படுகிறது. பாகற்காயில் உள்ள சரண்டின், மொமார்டின் வேதிப்பொருட்கள்தான் சர்க்கரை நோய்க்கு எதிரான கவசமாகத் திகழ்கின்றனவாம்.

பாகற்காய் ரத்தச் சர்க்கரை அளவை மட்டும் குறைக்கக் கூடியதல்ல. ரத்த கொழுப்பு வகைகளைக் குறைப்பதிலும், செல் அழிவைக் கட்டுப்படுத்தும் ஆன்டி ஆக்சிடென்டையும் கொண்டிருப்பதுதான் இந்தக் காயின் சிறப்பு. வெந்தயம், கறிவேப்பிலை போன்றவையும் இப்படிப்பட்ட சிறப்புத்தன்மையைக் கொண்டிருக்கின்றன.

பாகற்காய் சாப்பிடுவதால் நாம் உட்கொள்ளும் பிற நவீன மருந்துகளின் செயல்பாட்டில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது. ஆனால் இரண்டின் தன்மையும் ஒன்றோடு மற்றொன்று மாறுபடாதிருக்கக் குறைந்தபட்சம் 45 நிமிட இடைவெளி இருந்தால் நல்லது.

அதேநேரம் பல சித்த மருந்துகளுக்குப் பத்தியமாகப் பாகற்காய் நீக்கப்பட அறிவுறுத்தப்படுவதும் உண்டு. எனவே, சித்த மருந்து எடுத்துக்கொள்ளும் காலத்தில் நமது மருத்துவரின் ஆலோசனைக்குப் பின் பாகற்காய் சேர்ப்பது குறித்து முடிவெடுக்கலாம்.

அதிக மாவுச்சத்துப் பொருட்களைச் சாப்பிடுவது, உடலுழைப்பு குறைவு, அதிக உடல் எடை அல்லது அதிக மன உளைச்சல் ஆகியவை மட்டுமே நீரிழிவு நோய்க்கான முழுமையான காரணம் இல்லை. வேறு பல காரணங்களும் இருக்கின்றன. எது எப்படியிருந்தாலும், இன்று சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது, தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது உண்மை.

பாரம்பரியச் சித்த மருத்துவப் புரிதல்படி பார்த்தால், மேக நோயில் ஒரு வகையாகவே நீரிழிவு பார்க்கப்படுகிறது. இதைப் பல வகைகளில் சீர்ப்படுத்த வேண்டும். இல்லையென்றால், பல பின்விளைவு நோய்களைத் தரும் என்று அன்றே எடுத்துக்கூறியிருக்கிறார்கள்.

எனவே, நீங்கள் எந்தத் துறை சார்ந்த மருந்துகளை உட்கொண்டுவந்தாலும், உணவில் கவனம், சரியான உடற் பயிற்சி, உள்ளத்தையும் உடலையும் ஒருங்கே சீரமைக்கும் யோகாசனப் பயிற்சி ஆகிய அனைத்தும் சேர்ந்திருந்தால் மட்டுமே படிப்படியாக சர்க்கரை நோயைக் கட்டுக்குள் கொண்டுவர முடியும்.

எனவே, சர்க்கரை நோய்க்குக் கடிவாளம் போட பாகற்காய் போன்ற உணவுப்பொருட்களும் உதவும் என்றாலும், முழுக்க முழுக்க அதை மட்டுமே நம்பியிருக்கக் கூடாது. 

Next Story