புதிய ஆங்கில வார்த்தையைக் கண்டுபிடித்த 6 வயது சிறுவன்
‘லெவிடிரோம்’ வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதியிலும் இடம்பெறச் செய்ய வேண்டும் என சிறுவனின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
ஆச்சரியங்களை நிகழ்த்துவதற்கு வயது தடையில்லை என நிரூபித்திருக்கிறான் கனடாவைச் சேர்ந்த 6 வயது சிறுவனான லெவி பட்.
ஆங்கிலத்தில் உள்ள வார்த்தைகளை திருப்பி எழுதும்போது வேறு வார்த்தை உருவானால் அதை குறிப்பிட்டுச் சொல்வதற்கு வார்த்தை இல்லை. (தமிழில் ‘விகடகவி’ என்று குறிப்பிடுவதை நினைவில் கொள்க) அதனைக் குறிப்பிடுவதற்கு ‘லெவிடிரோம்’ (levidrome) என்ற புதிய வார்த்தையை சிறுவன் லெவி பட் உருவாக்கி இருக்கிறான். இந்த வார்த்தை, stressed, desserts போன்ற திருப்பி எழுதினாலும் அர்த்தம் தரக்கூடிய ஆங்கில வார்த்தைகளைக் குறிப்பிடுவதற்கு பயன்படுத்தப்படும்.
லெவி தனது தாயுடன் காரில் சென்றபோது, நிறுத்தல் சமிக்ஞையுடன் stop என்ற வார்த்தையைப் பார்த்திருக்கிறான். அதன் எழுத்துகளை திருப்பிப் படித்தபோது pots என்ற வார்த்தை உருவாகியிருக்கிறது.
இப்படி, திருப்பிப் படித்தால் அர்த்தம் தரக்கூடிய சொற்களைக் குறிக்கும் வார்த்தை ஏதும் ஆங்கிலத்தில் இருக்கிறதா என்று தனது தாயிடம் கேட்டிருக்கிறான். அவரும் இல்லை என்று சொல்லியிருக்கிறார். உடனே அந்த மாதிரியான வார்தைகளுக்கு ‘லெவிடிரோம்’ என்றே பெயர் சூட்டிவிட்டான் அச்சிறுவன்.
தற்போது இந்த வார்த்தையை மெர்ரியம்- வெப்ஸ்டர் ஆங்கில அகராதி அங்கீகரித்து ஏற்றுக்கொண்டிருக்கிறது.
‘லெவிடிரோம்’ வார்த்தையை ஆக்ஸ்போர்டு அகராதியிலும் இடம்பெறச் செய்ய வேண்டும் என சிறுவனின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.
அதற்கு, இந்த வார்த்தையை குறிப்பிட்ட காலத்துக்கு மக்கள் பயன்படுத்தினால் மட்டுமே தங்கள் அகராதியில் இடம்பெறச் செய்வோம் என்று அவர்கள் கூறியிருக்கின்றனர்.
ஆனால் சிறுவனின் கண்டுபிடிப்புக்கு பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர். மக்கள் பயன்படுத்தினால் மட்டுமே இந்த வார்த்தை அகராதியில் இடம்பெறும் என்பதால், பலர் இதை அன்றாடப் பயன்பாட்டுக்குக் கொண்டுவர முயலுகின்றனர். ஆக விரைவில், ‘லெவிடிரோம்’ ஆக்ஸ்போர்டு அகராதியில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story