மேம்பாலப்பணி தாமதத்தால் கடும்போக்குவரத்து


மேம்பாலப்பணி தாமதத்தால் கடும்போக்குவரத்து
x
தினத்தந்தி 25 Dec 2017 11:00 PM GMT (Updated: 25 Dec 2017 7:23 PM GMT)

கொளத்தூர்–ரெட்டேரி சந்திப்பில் மேம்பாலப்பணி தாமதத்தால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதால் மேம்பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

செங்குன்றம்,

சென்னையை அடுத்த கொளத்தூர்–ரெட்டேரி சந்திப்பு மிகவும் முக்கியமான பகுதியாகும். மாதவரத்தில் இருந்து சென்னை அண்ணா நகருக்கும், புழலில் இருந்து பெரம்பூருக்கும் பொதுமக்கள் பயன்படுத்தும் மிக முக்கிய சாலை சந்திப்பு என்பதால் காலை, மாலை நேரங்களில் இந்த பகுதியில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்க மத்திய அரசு நிதி ஒதுக்கியது. கடந்த தி.மு.க. ஆட்சியின்போது அடிக்கல் நாட்டப்பட்டு மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. சென்னை பாடியில் இருந்து மாதவரம், மாதவரத்தில் இருந்து பாடி என இரு வழிப்பாதையாக சாலையின் வலது மற்றும் இடது புறங்களில் பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.

சுமார் ரூ.30 கோடி மதிப்பில் இடதுபுறம் மேம்பாலம் கட்டும்பணி நடைபெற்று வந்தது. பணிகள் முடிவடைந்து கடந்த 6 மாதங்களுக்குமுன்பு பொதுமக்களின் பயன்பாட்டுக்கு பாலம் திறந்து வைக்கப்பட்டது.

இதையடுத்து ரூ.29 கோடியே 66 லட்சத்தில் மாதவரத்தில் இருந்து பாடிக்கு செல்லும் வலதுபுற மேம்பாலப்பணி கடந்த 2015–ம் ஆண்டு தமிழக நெடுஞ்சாலைத்துறை சார்பாக தொடங்கப்பட்டது. தொடர்ந்து பணி நடைபெற்று வருகிறது. தற்போது பாதி பணி முடிவடைந்த நிலையில், கடந்த 6 மாதமாக மேம்பாலப்பணியில் தொய்வு ஏற்பட்டு உள்ளது.

கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தமிழக மின்சார வாரியம் சார்பாக இடது புறத்தில் இருந்த மின்கம்பங்களை அகற்றி கேபிள் புதைக்குமாறு நெடுஞ்சாலைத்துறை சார்பாக மின்வாரியத்திற்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அவர்கள் மின்கம்பங்களை அகற்றவில்லை என தகவல் வெளியானது. இதுதொடர்பாக கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தினத்தந்தியில் செய்தி வெளியிடப்பட்டது. இதன் எதிரொலியாக மின்சார வாரியம் உடனடியாக மின்கம்பங்களை அகற்றி மின்கேபிள்களை புதைத்து கொடுத்தது.

தற்போது இந்த மேம்பாலப்பணி மிகவும் காலதாமதமாக நடந்து வருகிறது. இதனால் கொளத்தூர் – ரெட்டேரி சந்திப்பில் வழக்கம்போல் போக்குவரத்து நெரிசல் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும், வேலைக்கு செல்பவர்களும், வாகன ஓட்டிகளும் குறித்த நேரத்தில் செல்லமுடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.

இந்த மேம்பாலப்பணி விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தால் போக்குவரத்து நெரிசல் இருக்காது. குறிப்பாக ஆம்புலன்ஸ் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி உரிய நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாததால் நோயாளிகள் உயிரிழக்கும் சம்பவங்களும் தொடர்ந்து வருகின்றன.

மணல் தட்டுப்பாடு காரணமாக தற்போது மேம்பாலப்பணியில் காலதாமதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது. எனவே மணல் தட்டுப்பாட்டை சரிசெய்து மேம்பாலப்பணியை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.


Next Story