சென்னை விமான நிலையத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு


சென்னை விமான நிலையத்தில் பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 29 Dec 2017 11:00 PM GMT (Updated: 29 Dec 2017 6:52 PM GMT)

சென்னை விமான நிலையத்தில் பேட்டரி சொகுசு பஸ் தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்தில் இருந்து நேற்று காலை டெல்லிக்கு விமானம் சென்றது. இந்த விமானம் நடைமேடை 29–ல் நிறுத்தப்பட்டு இருந்ததால் பாதுகாப்பு சோதனைகளை முடித்துக்கொண்டு தயாராக இருந்த பயணிகள் அனைவரும் ஆம்னி பேட்டரி சொகுசு பஸ்சில் ஏற்றிச்சென்று விமான படிக்கட்டு அருகே இறக்கி விடப்பட்டனர்.

பின்னர் அந்த சொகுசு பஸ் திரும்பி வந்த போது, பஸ்சின் முன்பக்க பேட்டரியில் இருந்து திடீரென தீப்பொறி பறந்தது. உடனே பஸ் டிரைவர் லோகநாதன் (வயது 30) பஸ்சை நிறுத்தி விட்டு கீழே இறங்கினார். அதற்குள் பஸ் தீப்பிடித்து எரியத்தொடங்கியது.

இதை கண்டதும் விமான நிலைய தீயணைப்பு வீரர்கள், உடனடியாக தீயணைப்பு வாகனங்களில் விரைந்து வந்து சொகுசு பஸ்சில் எரிந்த தீயை அணைத்தனர். தீப்பிடித்து எரிந்ததில் ஆம்னி பஸ்சின் முன்பக்க கண்ணாடியின் ஒரு பகுதி உடைந்தது. டிரைவர் இருக்கை தீயில் எரிந்து நாசமானதுடன், பஸ்சின் முன்பகுதி சேதம் அடைந்தது. பேட்டரியில் ஏற்பட்ட மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது.

ஆம்னி கொகுசு பஸ்சில் பயணிகளை ஏற்றிச்செல்லும் போதோ, விமானத்தின் அருகே பயணிகளை இறக்கி விடும்போதோ தீப்பிடித்து இருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டு இருக்கும்.

விமான நிலையத்துக்குள் இயக்கப்படும் வாகனங்கள் முழு தகுதியுடன் இருக்கவேண்டும். ஆனால் இந்த பஸ்சில் மின்கசிவு ஏற்பட்டது எப்படி? என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story