2 குழந்தைகளின் தாயை கொலை செய்த ஆட்டோ டிரைவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு


2 குழந்தைகளின் தாயை கொலை செய்த ஆட்டோ டிரைவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவு
x
தினத்தந்தி 1 Jan 2018 10:15 PM GMT (Updated: 2018-01-02T03:00:03+05:30)

2 குழந்தைகளின் தாயை கொலை செய்த ஆட்டோ டிரைவர்களை 15 நாள் காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

வெள்ளியணை,

கரூர் மாவட்டம் ஏமூர் நடுப்பாளையத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவர் பர்வீன்பானு(வயது28) என்ப வரை காதலித்து திருமணம் செய்து கொண்டு நடுப்பாளையத்தில் வசித்து வந்தார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் பர்வீன்பானு வேறு ஆண்களுடன் பழகி வந்ததை இளையராஜா கண்டித்துள்ளார். இதனால் கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ந் தேதி பர்வீன்பானு வீட்டை விட்டு சென்று விட்டதாகவும், தனது மனைவியை கண்டுபிடித்து தரக்கோரியும் இளையராஜா கடந்த ஜூன் மாதம் 26-ந் தேதி வெள்ளியணை போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன பர்வீன்பானுவை தேடி வந்தனர். இந்த நிலையில் அவர் கடைசியாக பயன்படுத்திய செல்போன் எண்ணை கொண்டு விசாரணை செய்த போலீசாருக்கு அது சென்னையில் செயல்பட்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் நெப்போலியன், அழகுராம் மற்றும் போலீசார் சென்னை சென்று விசாரணை மேற்கொண்டனர்.

கொலை

விசாரணையில், பர்வீன்பானுவுடன் அடுத்தடுத்து குடும்பம் நடத்திய சென்னையை சேர்ந்த ஆட்டோ டிரைவர்கள் ராஜா, மாணிக்கம் ஆகிய இருவரும்,பர்வீன்பானு மற்றொருவருடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தால் அவரை கொலை செய்ததும், ஆட்டோ டிரைவர் கிஷோர் உதவியுடன் கல்லை கட்டி கிணற்றில் போட்டதும் தெரிய வந்தது. பின்னர் பர்வீன்பானுவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்தபின் மாணிக்கம், ராஜா, கிஷோர் ஆகியோரை கைது செய்து வெள்ளியணை போலீஸ் நிலையத்திற்கு நேற்று கொண்டு வந்து போலீசார் விசாரணை நடத்தினர்.

15 நாள் காவல்

இதையடுத்து நேற்று கோர்ட்டு விடுமுறை என்பதால் அவர்கள் 3 பேரையும் கரூர் ஜுடிசியல் மாஜிஸ்திரேட் எண்.1-ன் மாஜிஸ்திரேட் மோகனவள்ளி வீட்டில் ஆஜர்படுத்தினர். அவர், 3 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 

Next Story