உரிமத்தை புதுப்பிக்காத 64 மதுபான பார்களுக்கு ‘சீல்’


உரிமத்தை புதுப்பிக்காத 64 மதுபான பார்களுக்கு ‘சீல்’
x
தினத்தந்தி 1 Jan 2018 11:00 PM GMT (Updated: 1 Jan 2018 9:31 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் உரிமத்தை புதுப்பிக்காத 64 மதுபான பார்கள் மூடி ‘சீல்’ வைக்கப் பட்டன.

நாமக்கல்,

டாஸ்மாக் கடை வருமானத்தில் 2½ சதவீதம் முன்வைப்பு தொகையாக செலுத்தி இதுவரை பார் உரிமையாளர்கள் பார்களை ஏலம் எடுத்து வந்தனர். இந்த நிலையில் டாஸ்மாக் நிர்வாகம் இந்த தொகையை 3 சதவீதமாக உயர்த்தி உள்ளது. மேலும் இதனுடன் ஜி.எஸ்.டி.யும் இணைக்கப்பட்டு உள்ளது.

எனவே, முன்வைப்பு தொகை அதிகரித்து இருப்பதாக கூறி தமிழகம் முழுவதும் பெரும்பாலான பார் உரிமையாளர்கள் உரிமத்தை புதுப்பிக்காமல், ஏலத்தை புறக்கணித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவுடன் பார் நடத்துவதற்கான உரிமம் முடிவடைந்ததை தொடர்ந்து உரிமம் புதுப்பிக்காத மற்றும் ஏலம் போகாத பார்களை அதிகாரிகள் மூடி ‘சீல்’ வைத்து வருகின்றனர்.

அந்த வகையில் நாமக்கல் மாவட்டத்தில் உரிமம் புதுப்பிக்காத 64 பார்கள் மூடப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து டாஸ்மாக் அதிகாரிகள் கூறியதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் மொத்தம் 165 மதுபான கடைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் 73 கடைகளில் பார்கள் செயல்பட்டு வந்தன. இதில் சமீபத்தில் நடந்த ஏலத்தில் ராசிபுரம் பகுதியில் 7 பார்களும், பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் தலா ஒரு பாரும் என மொத்தம் 9 பார்கள் மட்டுமே ஏலம் போனது.

மாவட்டம் முழுவதும் 64 பார்கள் ஏலம் போகவில்லை. அவற்றின் உரிமக்காலம் நேற்று முன்தினம் இரவுடன் முடிவடைந்ததால் அவை மூடி ‘சீல்’ வைக்கப்பட்டு உள்ளது. மூடப்பட்ட பார்களை டாஸ்மாக் அலுவலர்கள் மற்றும் போலீசார் கண்காணித்து வருகின்றனர். அவற்றை சட்ட விரோதமாக திறந்தால், சம்பந்தப்பட்ட பார் உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

Next Story