மாவட்ட செய்திகள்

பெரம்பலூரில் கரும்புக்கு திடீர் கிராக்கி; ஒரு கட்டு ரூ.700 வரை விலைபோனது + "||" + Sleeping for sugarcane in Perambalur; Upto Rs

பெரம்பலூரில் கரும்புக்கு திடீர் கிராக்கி; ஒரு கட்டு ரூ.700 வரை விலைபோனது

பெரம்பலூரில் கரும்புக்கு திடீர் கிராக்கி; ஒரு கட்டு ரூ.700 வரை விலைபோனது
பெரம்பலூரில் கரும்புக்கு திடீரென கிராக்கி ஏற்பட்டதால் ஒரு கட்டு ரூ.700 வரை விலைபோனது. மேலும் மாட்டு பொங்கலையொட்டி மாடுகளுக்கான மூக்கணாங்கயிறு, கழுத்துமணி ஆகியவற்றை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அன்றைய தினம் மக்கள் தங்களது வீடுகளில் பொங்கலிட்டு சூரியபகவானுக்கு படைத்து வழிபட்டனர். மேலும் பெரம்பலூரிலுள்ள பிரம்மபுரீஸ்வரர் கோவில், மதனகோபாலசாமி கோவில், குரும்பலூர் பஞ்சநதீஸ்வரர் கோவில் உள்ளிட்ட கோவில்களில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். அதனை தொடர்ந்து நேற்று மாட்டு பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. உழவுக்கு வித்திட்ட மாடுகளை அலங்கரித்து அதற்கு பூஜை செய்து மக்கள் வழிபட்டனர்.


மேலும் மாட்டுபொங்கலையொட்டி பெரம்பலூர் பழைய பஸ்நிலைய பகுதியில் கரும்பு கட்டுகளின் விற்பனை படுஜோராக நடந்தது. கடைசி நேரத்தில் வாங்கி கொள்ளலாம் என நினைத்து மக்கள் கூட்டமாக கரும்பு வாங்க குவிந்தனர். இதனால் ரூ.200 முதல் ரூ.300 வரை விற்பனையாகி கொண்டிருந்த கரும்பு கட்டுகள் திடீரென ரூ.500-க்கு ஏற்றம் கண்டது. ஒற்றை கரும்பு மட்டும் ரூ.40, ரூ.50-க்கு விற்பனையானது. சில இடங்களில் 6 கரும்புகள் கொண்ட கட்டு ரூ.200-க்கு விற்றது. நேரம் செல்ல செல்ல கரும்பு கட்டுகள் விற்று தீர்ந்து கொண்டே இருந்ததால் ஒரு கட்டு கரும்பு ரூ.600, ரூ.700 வரை விலைபோனது.

ஆனால் மஞ்சள் குலை ஒருஜோடி ரூ.20 முதல் ரூ.40-க்கு விற்பனையானது. இதே போல் மாட்டுபொங்கல் வைக்க மண்பானை- அடுப்பு விற்பனையும் களை கட்டியது.

துறையூர் ரோடு பகுதியில் மாடுகளுக்கான மூக்கணாங் கயிறு-ரூ.30, கழுத்து மணி-ரூ.150, மாடுகளின் கொம்புகளில் கட்டப்படும் கயிறு-ரூ.45 ஆகியவற்றின் விற்பனையும் படுஜோராக நடந்தது. மாடு வைத்திருக்கும் விவசாயிகள் உள்ளிட்டோர் தங்களுக்கு தேவையான கயிறுகளை ஆர்வத்துடன் தேடி பிடித்து வாங்கினர். மக்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நிகழ்வதை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

பெரம்பலூரில் பொது இடங்களில் வைக்கப்பட்ட சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்தபடியே போலீசார் கண்காணித்து போக்குவரத்தை சீரமைப்பது உள்ளிட்ட நடவடிக்கையை மேற்கொண்டனர்.