நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட பெண் சாவு


நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட பெண் சாவு
x
தினத்தந்தி 15 Jan 2018 10:47 PM GMT (Updated: 15 Jan 2018 10:47 PM GMT)

கல்பாக்கத்தில், நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வரப்பட்ட பெண், திடீரென இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கல்பாக்கம்,

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கத்தில் உள்ள சென்னை அணுமின்நிலையத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருபவர் ரமேஷ்குமார்(வயது 57). இவர், கல்பாக்கம் அணுசக்திதுறை ஊழியர் குடியிருப்பு 7-வது தெருவில் வசித்து வருகிறார்.

இவருடைய மனைவி கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். தாயார் மற்றும் மகனுடன் வசித்து வந்த இவர், பார்வை குறைவான தனது தாயாரை கவனித்து கொள்ளவும், வீட்டு வேலைகளுக்காகவும் ராஜபாளையம் பகுதியை சேர்ந்த மாரியம்மாள்(40) என்ற பெண்ணை சமீபத்தில் வேலைக்கு வைத்திருந்தார்.

கடந்த 5-ந் தேதி ரமேஷ்குமாரும், அவருடைய மகனும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் அவரது தாயாரும், வேலைக்கார பெண்ணும் இருந்துள்ளனர். நகைகள் வைத்திருந்த அலமாரி சாவியை மறந்து வீட்டிலேயே விட்டு சென்று விட்டார்.

மாலையில் வந்து பார்த்த போது அலமாரியில் இருந்த 17 பவுன் நகை மாயமாகி இருந்தது. வேலைக்காரியும் மாயமாகி இருந்தார். எனவே அந்த நகையை வேலைக்கார பெண் திருடிச்சென்று விட்டதாக கல்பாக்கம் போலீஸ் நிலையத்தில் ரமேஷ்குமார் புகார் செய்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், ராஜபாளையம் சென்று அந்த பெண்ணை விசாரணைக்காக நேற்று முன்தினம் கல்பாக்கம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். போலீஸ் நிலையத்தில் அவரிடம் போலீசார் விசாரணை நடத்திக்கொண்டிருந்த போது திடீரென மாரியம்மாள் மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது.

போலீசார் உடனடியாக அவரை மீட்டு கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அந்த வேலைக்கார பெண் மாரியம்மாள் உயிரிழந்து விட்டார். ரத்த அழுத்தம் குறைவால் அவர் இறந்து விட்டதாக கூறப்படுகிறது.

நகை திருட்டு வழக்கில் விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட பெண் போலீஸ் நிலையத்தில் திடீரென இறந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story