நெல்லை மாவட்டத்தில் பொங்கல் விழா கோலாகலம்


நெல்லை மாவட்டத்தில் பொங்கல் விழா கோலாகலம்
x
தினத்தந்தி 15 Jan 2018 11:18 PM GMT (Updated: 15 Jan 2018 11:18 PM GMT)

நெல்லை மாவட்டத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

நெல்லை,

தமிழர் திருநாளான பொங்கல் திருநாளுக்கு மறுதினம் (நேற்று) மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி நேற்று நெல்லை மாவட்டத்தில் கால்நடைகளை வளர்ப்போர் நேற்று நீர் நிலைகளுக்கு அழைத்துச் சென்று குளிப்பாட்டினர். பின்னர் அவற்றின் கொம்புகளுக்கு வர்ணம் தீட்டியும், புதிய சரடு கயிறுகள் மாட்டினர். நெற்றியில் சந்தனம், குங்குமம் வைத்து அழகுபடுத்தினர். தோட்டம், வீடுகளில் கால்நடைகளுக்கு முன்பு பொங்கல் வைத்து வழிபாடு நடத்தப்பட்டது.

நெல்லை அருகே உள்ள முன்னீர்பள்ளத்தில் விவசாயிகள், கால்நடைகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். இதே போல் தாமிரபரணி ஆற்றங்கரை பகுதியை சேர்ந்த விவசாயிகள், ஆற்றில் மாடுகளை குளிப்பாட்டி மாட்டு பொங்கலை உற்சாகமாக கொண்டாடினர். அருகன்குளத்தில் உள்ள எட்டெழுத்து பெருமாள் கோவிலில் மார்கழி மாதம் பாவை நோன்பு மேற்கொண்ட இளம்பெண்கள் விரைவில் திருமணம் நடைபெற வேண்டி நேற்று கோ-சாலை முன்பு பொங்கலிட்டனர். மேலும் பசுக்களுக்கு சிறப்பு பூஜை நடத்தி வழிபட்டனர்.


பாளையங்கோட்டை அரியகுளம் சாரதா மகளிர் கல்லூரியில் மாட்டு பொங்கல் மற்றும் சர்வ சமய சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. திருப்பராய்த்துறை ராமகிருஷ்ண தபோவன துணை தலைவர் சுத்தானந்தா சுவாமி தலைமை தாங்கினார். ஆசிரியர் கணபதி சுப்பிரமணியன் வரவேற்றார். கல்லூரி நிர்வாகி பக்தானந்தா சுவாமி, செயலாளர் சரவணபவ பிரியா ஆகியோர் பசுக்களுக்கு வழிபாடு நடத்தினர்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துராமலிங்கம், பாளையங்கோட்டை மத்திய சிறை சூப்பிரண்டு செந்தாமரை கண்ணன், மரியசூசை, பன்னாட்டு மத சுதந்திர கூட்டமைப்பு தலைவர் சிதம்பரம், துணை தலைவர் கபீர், அந்தோணி குரூஸ் அடிகளார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

காணும் பொங்கலை முன்னிட்டு நெல்லை கொக்கிரகுளத்தில் உள்ள அறிவியல் மையத்தில் பொது மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அறிவியல் மைய வளாகத்தில் உள்ள விளையாட்டு உபகரணங்களில் ஏறி குழந்தைகள், மாணவ-மாணவிகள் விளையாடினார்கள். பூங்கா மற்றும் பெஞ்சுகளில் அமர்ந்து உணவருந்தி மகிழ்ந்தார்கள். இதையொட்டி அறிவியல் மைய ரோட்டில் ஏராளமான கடைகள் அமைத்திருந்தனர். மேலும் அந்த ரோட்டில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதுதவிர நேற்று கரிநாளையொட்டி ஆடு, கோழி இறைச்சிகளை அதிகமானோர் வாங்கி சமைத்து சாப்பிட்டனர். இதையொட்டி இறைச்சிக்கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

Next Story