பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 17 Jan 2018 10:45 PM GMT (Updated: 17 Jan 2018 8:43 PM GMT)

செய்யாறு அருகே பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

செய்யாறு,

செய்யாறு தாலுகா அரசூர் கிராமத்தில் வசிக்கும் விவசாயிகள் மற்றும் கூலித்தொழிலாளி குடும்பத்தை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் புரிசை அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருந்து சுமார் 7 கிலோ மீட்டர் தூரத்தில் அந்த பள்ளி உள்ளதால் மாணவர்கள் சைக்கிளிலும், நடந்தும் பள்ளிக்கு சென்று வருகின்றனர். மேலும் இப்பள்ளியில் எருமைவெட்டி, எச்சூர் உள்பட பல்வேறு கிராமத்தில் இருந்தும் மாணவர்கள் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

தமிழக அரசு சார்பில் மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டுள்ளது. அதனை பயன்படுத்தி மாணவ - மாணவிகள் பள்ளிக்கு உரிய நேரத்திற்கு செல்ல அரசூர் கிராமத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திற்கு அரசூர் கூட்ரோட்டிற்கு நடந்து வந்து செய்யாறு - வந்தவாசி சாலையில் செல்லும் அரசு பஸ்சில் இலவச பஸ் பாஸ்சை பயன்படுத்தி பள்ளிக்கு செல்லுவது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு மேலாக காலை 8.30 மணிக்கும், மாலை 6 மணிக்கும் வந்தவாசி அரசு போக்குவரத்து பணிமனையின் மூலமாக இயக்கிய வந்த தடம் எண் 1 டவுன் பஸ் இயக்கப்படுவதில்லை என மாணவ - மாணவிகள் குற்றம் சாட்டுகின்றனர். டவுன் பஸ் வராத நிலையில் அந்த சாலையில் வரும் அரசு பஸ்களில் ஏற்றிச்செல்ல மாணவர்கள் பஸ்சை நிறுத்த கைகள் மூலம் சைகை காண்பித்தாலும் அரசு பஸ் டிரைவர்கள் நிறுத்துவதில்லை. ஆனால் அரசு பஸ் டிரைவர்கள் தங்கள் உறவினர்கள், நண்பர்களை எங்கு பார்த்தாலும் ஏற்றிச் செல்ல நிறுத்திடும் போது பள்ளி மாணவர்களை கண்டால் மட்டும் பஸ்சை நிறுத்தாமல் செல்லுகின்றனர்.

தமிழக அரசு இலவச பஸ் பாஸ் வழங்கியும் மாணவர்களுக்கு எந்த பயனும் இல்லை. இதனால் நாங்கள் நடந்தும், அந்த வழியாக செல்லும் லோடு ஆட்டோ, மோட்டார் சைக்கிளில் உதவி கேட்டு பள்ளிக்கு சென்று வருகிறோம். எனவே, பள்ளி நேரத்தில் அரசு பஸ்சை இயக்க வேண்டும், அந்த வழியாக செல்லும் அரசு பஸ்களில் மாணவர்களை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என செய்யாறு - வந்தவாசி சாலையில் அரசூர் கூட்ரோட்டில் பள்ளி மாணவர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அனக்காவூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சுதாகர், சப்-இன்ஸ்பெக்டர்கள் சீனுவாசன், அலெக்ஸ் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுப்பட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினர்.

அதைத் தொடர்ந்து மாணவ - மாணவிகள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் அந்த பகுதியில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story