துறைவாரி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


துறைவாரி சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 3 Feb 2018 4:30 AM IST (Updated: 3 Feb 2018 1:29 AM IST)
t-max-icont-min-icon

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரை கண்டித்து துறைவாரி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது கலெக்டரை பேசவிடாமல் கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட கலெக்டரை கண்டித்து நேற்று திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு துறைவாரி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் ஜோதிசங்கர் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் தமிழ்செல்வி, மாநில வருவாய்த்துறை ஊழியர் சங்க பொதுச்செயலாளர் பார்த்திபன் உள்பட பல்வேறு சங்கங்களை சேர்ந்த மாநில, மாவட்ட பிரதிநிதிகள் கலெக்டரை கண்டித்து பேசினர். அப்போது அவர்கள், ஆய்வுக் கூட்டங்களில் கலெக்டர் கடுஞ்சொற்களால் ஊழியர்களை வசைபாடுகிறார் என்பது உள்பட பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்து கோஷங்கள் எழுப்பி பேசிக் கொண்டு இருந்தனர்.

அந்த சமயத்தில் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி, மாவட்ட வருவாய் அலுவலர் ரத்தினசாமி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி மற்றும் அதிகாரிகள் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடத்திற்கு சென்று, ஆர்ப்பாட்டத்தில் பேசப்படுவதை கேட்டுக் கொண்டு இருந்தனர்.

கலெக்டரை கண்டதும் அவரை கண்டித்து பேசியவர்கள், என்ன பேசுவது என்று தெரியாமல் தவித்தனர். இதையடுத்து அவர்கள் கலெக்டர் கடுஞ்சொற்களை பயன்படுத்த கூடாது என்று சாதுவாக பேச தொடங்கினர். பின்னர் தங்களது குறைகளை மென்று முழுங்கியவாறு தெரிவித்தனர்.

அப்போது ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருந்த கலெக்டர் சில நிமிடம் பேச அனுமதி வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தவர்கள் அருகில் சென்றார். அதைத்தொடர்ந்து கலெக்டர் கந்தசாமிக்கு பேச வாய்ப்பு அளிக்கப்பட்டது. அப்போது அவர், நான் எந்த பெண்ணையும் தரக்குறைவாக பேச வில்லை. அப்படி பேசி இருக்கவும் மாட்டேன். சிலர் செய்த தவறுகளை மட்டுமே சுட்டிகாட்டி இருப்பேன்.

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு நான் கலெக்டராக பெறுப்பேற்ற நாளில் இருந்து, இந்த மாவட்டத்தின் குடிமகனாக தான் செயல்பட்டு வருகிறேன். திருவண்ணாமலை மாவட்டத்தை சுகாதாரத்தில் முதல் மாவட்டமாக கொண்டு வந்து உள்ளேன். இதனை நான் செய்ய வில்லை. உங்களால் தான் செய்ய முடிந்தது என்று தொடர்ந்து பேசி கொண்டிருந்த போது, சத்துணவு மற்றும் அங்கன்வாடியில் நடைபெற்ற சில முறைகேடுகள் பற்றி கூற தொடங்கினார்.

அந்த சமயத்தில் அரசு ஊழியர் சங்க மாநில துணை செயலாளர் குறுக்கிட்டு எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்று தான் கூறினோம். அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கலெக்டரை பேசவிடாமல் பேசிக்கொண்டே இருந்தார். அப்போது கலெக்டர் எனக்கு பேச அனுமதி வழங்குங்கள் என்று தொடர்ந்து கேட்டு கொண்டு இருந்தார். இதையடுத்து கலெக்டர், ஆர்ப்பாட்டத்தில் குளறுபடி செய்கிறார் என்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தை நடத்த விடுங்கள் அல்லது எங்களை கைது செய்யுங்கள் என்று கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து கலெக்டர் தனது அறைக்கு சென்றார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், நேரில் சென்று நான் எனது கருத்துகளை சொன்னேன். ஆதரமற்ற சில கருத்துக்களை மாவட்ட கலெக்டர் மீது கொச்சைப்படுத்தி கூறினர். எனது தரப்பு நியாயத்தை அவர்களிடம் தெரிவிக்க அனுமதி கேட்டேன். பின்னர் நான் பேச ஆரம்பித்தேன். அப்போது அவர்கள் அதனை திசைத் திருப்பி விட்டனர். சில குறிப்பிட்ட நபர்கள், அவர்களின் ஆதாயத்திற்காக அரசு ஊழியர்களை திருப்பிவிட்டு வருகின்றனர்’ என்றார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story