‘பாஸ் மார்க்’ பட்ஜெட்


‘பாஸ் மார்க்’ பட்ஜெட்
x
தினத்தந்தி 3 Feb 2018 10:20 AM GMT (Updated: 3 Feb 2018 10:20 AM GMT)

மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே வந்த தேர்தலுக்கு முந்தைய மத்திய அரசின் பட்ஜெட், எதிர்பார்ப்புகளை ஓரளவு மட்டுமே நிறைவு செய்த பட்ஜெட் என்று சொல்லலாம். இதற்கு பல நியாயங்களும், காரணங்களும் இருக்கலாம். ஆனாலும் யதார்த்தம் என்பது ஏமாற்றம் கலந்து வந்து இருக்கும் பட்ஜெட் என்பதே சரி.

குற்றம் நிதிநிலை அறிக்கை தயாரிப்பவரிடம் இல்லை. குற்றம் இருப்பது எதிர்பார்ப்பு வைத்து இருப்பவர்களிடம் தான். ஒரு மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் ஏழ்மை மாறாத மக்கள் இருக்கும் நாட்டில், பல்வேறு தேவைகள் இருக்கிற நாட்டில் ஓராண்டு பட்ஜெட் எல்லோரையும் திருப்தி செய்து விட முடியாது என்பதும் அதே அளவு யதார்த்தம்.

இந்த ஆண்டு பட்ஜெட் குறித்த எதிர்பார்ப்புகள் எப்படி இருந்தது என்று பார்த்தால், அது பல்வேறு வகைகளாக இருந்தது என்று சொல்லலாம். அதாவது, மாத சம்பளம் வாங்கி வரிக் கட்டிக்கொண்டு இருக்கிற மத்திய தர வர்க்கம்; பணமதிப்பு நீக்க நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி.யால் சிரமத்தை சந்தித்த சிறு வியாபாரிகள் மற்றும் சிறு, குறு நிறுவனங்கள்; மழையையும், அரசு தருகிற ஆதரவையும் நம்பி இருக்கின்ற அதிகம் குரல் எழுப்ப முடியாத விவசாயிகள்; தங்களது நேரடி வருமானம் போக கூடுதல் வருமானத்துக்காக பங்கு சந்தையில் வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர்கள்; குடும்ப தலைவிகள்; மாணவர்கள்; பொருளாதார வல்லுனர்கள் என ஒவ்வொரு தரப்பின் எதிர்பார்ப்பும் வெவ்வேறாக இருந்தது. இதிலும் ஆச்சர்யம் இல்லை.

இவர்கள் அனைவரையும் திருப்தி செய்ய என்ன செய்திருக்கிறார் நிதி மந்திரி?

விவசாயிகளை பொறுத்தவரை கடன் வழங்கு தொகையின் அளவை 8½ லட்சம் கோடி ரூபாயில் இருந்து 11 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தி இருக்கிறார். ரூ.100 கோடிக்கு குறைவாக வருமானம் இருக்கிற, விவசாய பொருட்கள் உற்பத்தி நிறுவனங்களுக்கு முழுமையான வருமான வரி விலக்கு அளித்து இருக்கிறார். மேலும் கிராமப்புற விவசாயிகளுக்கு 16 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு, 500 நகரங்களில் இருக்கிற வீடுகளுக்கு குடிநீர் வசதி, நாடு முழுவதும் 5 லட்சம் இடங்களில் இணைய சேவை தரும் ‘ஹாட்ஸ்பாட்’ ஏற்பாடு. இவையெல்லாம் தவிர மிக முக்கியமாக 10 கோடி ஏழைக் குடும்பங்களுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.5 லட்சம் வரை ‘உடல்நல பாதுகாப்பு திட்டம்’ மூலம் காப்பீடும், மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு வழங்குகிற கடன் தொகை ஒதுக்கீடு ரூ.75 ஆயிரம் கோடியாகவும் உயர்த்தி இருக்கிறார்.

இதுதவிர மத்திய நிதி மந்திரி முக்கியமாக சொல்லி இருப்பது விவசாய பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை அவர்களுக்கு ஆகிற செலவை போல 1½ மடங்கு இருக்க வேண்டும் என்பதுதான். அதற்காக மாநில அரசுகளுடன் மத்திய அரசின் ‘நிதிஆயோக்’ என்ற திட்ட கமிஷன் கலந்து பேசும் என்றும் அறிவித்து இருக்கிறார்.

மேலும் சாதாரண மக்களுக்கு 2 கோடி புதிய கழிவறைகள் கட்டப்படும் என்றும், 8 கோடி எரிவாயு இணைப்பு வழங்கப்படும் என்றும் அறிவித்து இருக்கிறார். மூத்த குடிமக்கள் வங்கி மற்றும் தபால் நிலையங்களில் வைத்துள்ள வைப்பு தொகை வட்டிக்கு கூடுதல் வரி விலக்கும், அவர்கள் காப்பீட்டு தொகைக்கான வரி விலக்கு ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.50 ஆயிரமாகவும் உயர்த்தப்பட்டு உள்ளது. வருமானவரி உச்சவரம்பை உயர்த்தாமல் ரூ.40 ஆயிரம் ‘ஸ்டாண்டர்டு டிடெக்‌ஷன்’ என்ற பெயரில் வரி விலக்கு மட்டும் கொடுத்து இருக்கிறார்.

ஓராண்டுக்கு மேலாக பங்குகளை வைத்திருந்து விற்பதில் கிடைக்கும் முதலீட்டு ஆதாயம் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் போனால், அதற்கு 10 சதவீத வருமானவரி விதித்து இருக்கும் துணிச்சலான நடவடிக்கை பாராட்டுக்குரியது. செல்போன் மற்றும் சில இறக்குமதி பொருட்களின் விலையை உயர்த்தி இருக்கிறார்.

50 கோடி ரூபாய் வரை ஆண்டு விற்றுமுதல் செய்யும் கார்பரேட் நிறுவனங்களுக்கு ஏற்கனவே 30 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக வருமான வரியை குறைத்து சலுகை அளிக்கப்பட்டு இருந்தது. தற்போது, இந்த சலுகையை 250 கோடி ரூபாய் வரை ஆண்டு விற்றுமுதல் செய்யும் கார்பரேட் நிறுவனங்களுக்கும் வழங்கி உள்ளார்.

ரெயில்வே பட்ஜெட்டும் பொது பட்ஜெட்டோடு இணைந்து இருக்கிற காரணத்தால் ரெயில்வே திட்டங்களையும் நிதி மந்திரி அறிவித்துள்ளார். அடுத்த நிதியாண்டில் ரூ.1 லட்சத்து 48 ஆயிரம் கோடிக்கு ரெயில்வேயில் முதலீடு, 4 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்துக்கு புதிய ரெயில் பாதைகள், மும்பை, பெங்களூரு நகர ரெயில் திட்டத்துக்கு முறையே ரூ.51 ஆயிரம் கோடி, ரூ.17 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.

மொத்தத்தில் விவசாயிகள், ஏழை மக்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு சில சாதகங்களையும், சிறிய கார்பரேட் நிறுவனங்களுக்கு சில சலுகைகளையும், மாத ஊதியம் பெறும் மத்திய தரவர்க்கத்தினருக்கு எதிர்பார்த்த சலுகைகளை தராமலும், பங்கு முதலீட்டாளர்களுக்கு புதிய வரி போட்டும் பட்ஜெட்டின் பற்றாக்குறையையும், கடனையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் விதமாக ஒரு ‘பாஸ் மார்க்’ பட்ஜெட் போட்டு இருக்கிறார்.

- சோம வள்ளியப்பன்

Next Story