டாஸ்மாக், ரேஷன்கடை உள்பட வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும், கலெக்டர் தகவல்


டாஸ்மாக், ரேஷன்கடை உள்பட வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற வேண்டும், கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 8 Feb 2018 8:30 AM IST (Updated: 8 Feb 2018 8:32 AM IST)
t-max-icont-min-icon

வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் உணவு பாதுகாப்பு துறையில் உரிமம் பெற வேண்டும் என்று கலெக்டர் சிவஞானம் கூறினார்.

விருதுநகர்,

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் உணவு பாதுகாப்புத் துறையின் மூலம் உணவு வணிகர்களுக்கான உரிமம் மற்றும் பதிவு தொடர்பான வழிகாட்டுதல் குழு கூட்டம் கலெக்டர் சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-

தமிழ்நாடு உணவுபாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத் துறையின் மூலம் உணவுப் பொருட்கள் கையாளும் நிறுவனங்களுக்கு உரிமம் பதிவுச் சான்று வழங்கப்பட்டு வருகிறது. மளிகைக் கடை, பெட்டிக்கடை, குளிர்பானங்கள், பால் பொருட்கள், இறைச்சிக் கடைகள், குடிநீர் தயாரிப்பு நிறுவனங்கள், குடிநீர் வினியோகிப்பவர்கள், உணவு விடுதிகள், தேநீர் கடைகள், இனிப்பு பலகார கடைகள், பேக்கரி நிறுவனங்கள், பழக்கடைகள், பழ வண்டிகள், திருமண மண்டபங்கள், சில்லரை விற்பனையாளர்கள், நடமாடும் தள்ளுவண்டிகள் ஆகிய வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும் உணவுப் பாதுகாப்பு துறையில் உரிமம் பதிவுச் சான்று பெற வேண்டும்.

மேலும் அரசு மூலம் நடத்தப்படும் டாஸ்மாக் கடைகள், கூட்டுறவு பண்டக சாலைகள், கூட்டுறவு சங்கங்களின் மூலம் நடத்தப்படும் ரேஷன் கடைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், கருணை இல்லங்கள், அன்னதான மையங்கள், அரசு விடுதிகள் போன்ற உணவு விற்பனை மற்றும் கையாளும் நிறுவனங்களும் உரிமம் பதிவுச் சான்று பெற வேண்டும். ஆண்டு வர்த்தகம் ரூ.12 லட்சத்திற்கு குறைவாக விற்றுக் கொள்முதல் செய்வோர் பதிவுக் கட்டணம் ரூ.100 செலுத்தி உணவு பாதுகாப்பு அலுவலரிடம் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது அருகில் உள்ள பொது சேவை மையம் மூலம் பதிவேற்றம் செய்து பதிவுச் சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.

ஆண்டு வர்த்தகம் ரூ.12 லட்சத்திற்கு அதிகமாக கொள்முதல் செய்வோர் உரிம கட்டணமாக ரூ.2 ஆயிரம் மற்றும் தயாரிப்பாளர்கள் உற்பத்திக்கு ஏற்ற வகையில் உரிய கட்டணமும், உரிய ஆவணங்களும் செலுத்தி மாவட்ட நியமன அலுவலரிடம் உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும். உரிமம் பதிவு சான்றினை ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பித்துக் கொள்ள வேண்டும்.

மாவட்டத்தில் இதுவரை 12,058 உணவு வணிகர்கள் பதிவு செய்துள்ளனர். 45 வழக்குகளில் தீர்ப்பளிக்கப்பட்டு ரூ.25 லட்சத்து 37ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அனைத்து உணவு வணிகர்களும் கட்டாயமாக உரிமம் அல்லது பதிவு பெற்றிருக்க வேண்டும். உரிமம் மற்றும் பதிவுச் சான்று பெற இணையதள முகவரி வாயிலாகவும், இ-சேவை மையங்கள் மூலமாகவும் விண்ணப்பம் செய்யலாம்.

மேலும் மாம்பழங்கள், வாழைப்பழம், சப்போட்டா, எலுமிச்சை பழம் போன்றவற்றை செயற்கையாக பழுக்க வைக்கக் கூடாது. திறந்த வெளியில் அளவுக்கு அதிகமான எத்திலின் திரவத்தை பயன்படுத்தக் கூடாது. எத்திலின் பயன்படுத்துவதற்கான விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். மேலும், உணவு பாதுகாப்பு உரிமம், பதிவு சான்றிதழ் தொடர்பாக உரிய விவரங்கள் அறிய 94435 20332, 04562-252255 என்ற எண்களை தொடர்புகொண்டு அறியலாம். 9444042332 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார்களை தெரிவிக்கலாம். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆனந்த குமார், மாவட்ட உணவு பாதுகாப்பு பிரிவு நியமன அலுவலர் அனுராதா, அரசு அலுவலர்கள், வியாபாரிகள் சங்க பிரதிநிதிகள், நுகர்வோர் அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். 

Next Story