லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் வங்கி மேலாளர், மகளுடன் பலி


லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் வங்கி மேலாளர், மகளுடன் பலி
x
தினத்தந்தி 19 Feb 2018 11:45 PM GMT (Updated: 19 Feb 2018 7:06 PM GMT)

பாடி மேம்பாலத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றபோது நடந்த விபத்தில் லாரி சக்கரத்தில் சிக்கி தனியார் வங்கி மேலாளர், மகளுடன் பரிதாபமாக பலியானார். அவரது மனைவியும், மற்றொரு மகளும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அம்பத்தூர்,

சென்னை பெரம்பூரை அடுத்த பெரவள்ளூர் ஜி.கே.எம். காலனி 41-வது தெருவை சேர்ந்தவர் ஆனந்த் (வயது 38). இவர் வடபழனியில் உள்ள தனியார் வங்கி கிளை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்தார்.

இவரது மனைவி அனுஜா (28), சென்னை அண்ணாநகரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் கணக்கராக வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு தனுஜா (9), சஞ்சனாஸ்ரீ (3) என்ற 2 மகள்கள் இருந்தனர்.

நேற்று முன்தினம் ஆனந்த், தனது மனைவி மற்றும் மகள்களுடன் அம்பத்தூர் அருகே உள்ள பாடிக்கு பொருட்கள் வாங்க சென்றார். பொருட் களை வாங்கி விட்டு அவர்கள் 4 பேரும் இரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தனர்.

பாடி மேம்பாலத்தில் சென்றபோது, முன்னால் சென்ற கன்டெய்னர் லாரியை முந்தி செல்ல ஆனந்த் முயன்றார். அப்போது லாரியின் பக்கவாட்டில் மோட்டார் சைக்கிள் உரசியது. இதில் மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறவே அதில் இருந்த 4 பேரும் கீழே விழுந்தனர். இதில் கண்ணிமைக்கும் நேரத்தில் லாரியின் பின் சக்கரத்தில் அவர்கள் சிக்கிக்கொண்டனர்.

இதில் ஆனந்த் மற்றும் மூத்த மகள் தனுஜா இருவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். அனுஜாவும், இளைய மகள் சஞ்சனாஸ்ரீயும் படுகாயம் அடைந்தனர்.

இதைத்தொடர்ந்து படுகாயமடைந்த அவர்கள் இருவரையும் சாலையில் சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் ஆனந்த், தனுஜா ஆகியோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுனர் செங்கல்பட்டு பொன்கனச்சேரி பகுதியை சேர்ந்த மனோகரனை (29) கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விபத்தால் பாடி மேம்பாலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுடன், சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.

Next Story