மாவட்ட செய்திகள்

திருடன் என நினைத்து கிராம மக்கள் துரத்தியதால் விபரீதம்: கிணற்றில் தவறி விழுந்து என்ஜினீயர் சாவு + "||" + Due to the thief's disappearance villagers disaster: falling into the well and engineer death

திருடன் என நினைத்து கிராம மக்கள் துரத்தியதால் விபரீதம்: கிணற்றில் தவறி விழுந்து என்ஜினீயர் சாவு

திருடன் என நினைத்து கிராம மக்கள் துரத்தியதால் விபரீதம்: கிணற்றில் தவறி விழுந்து என்ஜினீயர் சாவு
திருடன் என நினைத்து கிராம மக்கள் துரத்தியதால் கிணற்றில் தவறி விழுந்து என்ஜினீயர் பரிதாபமாக உயிரிழந்தார். இதில் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யக்கோரி துறையூர் அரசு மருத்துவமனை முன்பு உறவினர்கள் சாலை மறியல் செய்ய முயன்றனர்.
துறையூர்,

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த உப்பிலியபுரம் அருகே உள்ள மாராடியை சேர்ந்தவர் மணிவண்ணன். இவருடைய மகன் அலெக்சாண்டர் (வயது 22). இவர் துறையூர் அருகே உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் சிவில் என்ஜினீயரிங் படித்து முடித்து விட்டு வேலை தேடி வந்தார். நேற்று முன்தினம் இரவு திருப்பூருக்கு வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு, பஸ் ஏறுவதற்காக வீட்டில் இருந்து தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் புடலாத்தி சாலையில் வந்து இறங்கினார். அப்போது அங்கிருந்த தெருவிளக்கை அலெக்சாண்டர் கல் வீசி உடைத்ததாக கூறப்படுகிறது.


அப்போது அங்கிருந்தவர்கள் எதற்காக தெருவிளக்கை உடைக்கிறாய் என்று கேட்டனர். அதற்கு அலெக்சாண்டர், அவர்களையும் கற்களால் தாக்க முயன்றதாக தெரிகிறது. இதனால், ஆத்திரம் அடைந்த அவர்கள் அலெக்சாண்டரை திருடன் என நினைத்து அருகில் உள்ள கிராம மக்களை அழைத்து உள்ளனர். அப்போது கிராம மக்கள் சிலர் ஒன்று சேர்ந்து அலெக்சாண்டரை துரத்தினர். இதனால் பயந்துபோன அலெக்சாண்டர் வயல் பகுதியில் இறங்கி ஓடினார். அவரை துரத்தி சென்ற கிராம மக்கள் அவரை காணாததால் திரும்பி வந்து விட்டனர்.

இந்நிலையில் நேற்று காலை கிருஷ்ணாபுரம் அருகே உள்ள கந்தசாமி, சரவணன் ஆகியோருக்கு சொந்தமான 100 அடி ஆழ கிணற்றில் அலெக்சாண்டர் பிணமாக கிடந்தார்.இதுகுறித்த தகவலின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அலெக்சாண்டர் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் அவருடைய உடல் பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில் அலெக்சாண்டரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறியும், அவர் அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்தவர் என தெரிந்தும் கிராம மக்கள் துரத்தி சென்றது ஏன்? என்றும், இந்த சம்பவம் குறித்து நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு அந்த ஊரை சேர்ந்தவர்கள் உப்பிலியபுரம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தும் போலீசார் உடனடியாக வராமல் தாமதமாக மறுநாள் காலையில் வந்தது ஏன்? என்று கேட்டு அலெக்சாண்டரின் உறவினர்கள் நேற்று துறையூர் அரசு மருத்துவமனை முன்பு சாலை மறியல் செய்ய முயன்றனர்.

அவர்களிடம் முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன் மற்றும் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அலெக்சாண்டரை துரத்தி சென்றவர்களை கைது செய்வதாக அவர் உறுதி அளித்ததின் பேரில் உறவினர்கள் கலைந்து சென்றனர். இது குறித்து உப்பிலியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.