தகுதியற்றவர்கள் பிரசவம் பார்த்தால் கடும் நடவடிக்கை


தகுதியற்றவர்கள் பிரசவம் பார்த்தால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 23 Feb 2018 4:30 AM IST (Updated: 23 Feb 2018 4:11 AM IST)
t-max-icont-min-icon

பயிற்சி பெறாத தகுதியற்றவர்கள் பிரசவம் பார்த்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

புதுச்சேரி,

புதுவை யூனியன் பிரதேசத்தில் நடைபெறும் பிரசவங்கள் அனைத்தும் மருத்துவமனை பிரசவங்களாகும். பிரசவங்களுக்கு பிறகு தாயும், சேயும் மருத்துவமனையில் 48 மணி நேரம் நலத்திற்காக சிகிச்சை பெறுகிறார்கள். புதியதாக பிறந்த குழந்தைகள் நலம் காக்க பிறந்தவுடன் தடுப்பூசி போடப்படுகிறது.

மருத்துவமனையில் நிகழும் பிரசவத்துக்கு வாகன வசதி, மருத்துவ வசதி, நோய் கண்டறிதல், பரிசோதனை மற்றும் மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும் ரூ.2 ஆயிரம் மற்றும் ரூ.600 அரசின் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.

மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி தாய்சேய் மற்றும் பாதுகாப்பிற்காக பிரசவங்கள் அனைத்தும் தகுதிவாய்ந்த நபர்களால் மருத்துவமனையில் மட்டுமே நடைபெற வேண்டும். நமது புதுவை யூனியன் பிரதேசத்தில் தவறான வழிகாட்டுதல் மற்றும் அறியாமையினால் மிகச்சிலரே வீட்டில் பிரசவிக்கின்றனர்.

இப்படி நடைபெறும் பிரசவம் பயிற்சி பெறாத, தகுதியற்ற, முதலுதவி வசதிகூட இல்லாத இடங்களில் மருத்துவர் என கூறிக்கொள்ளும் நபர்களால் பார்க்கப்படுகிறது. இதனால் தாய் மற்றும் சேய் இறப்பு விகிதம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. ஆதலால் இதன் மூலம் எச்சரிக்கை செய்வது என்னவென்றால் இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் இயக்குனர் ராமன் கூறியுள்ளார்.

Next Story