மாவட்ட செய்திகள்

ஊட்டி அருகே 3 நாட்கள் கிராம பகுதியில் முகாமிட்டு இருந்த யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது + "||" + The elephant was camped in the rural area and was driven into the forest

ஊட்டி அருகே 3 நாட்கள் கிராம பகுதியில் முகாமிட்டு இருந்த யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது

ஊட்டி அருகே 3 நாட்கள் கிராம பகுதியில் முகாமிட்டு இருந்த யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது
ஊட்டி அருகே 3 நாட்களாக கிராம பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டு யானை வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது. அந்த யானை வனத்துறையினரை துரத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
ஊட்டி,

நீலகிரி மாவட்டம் அதிகமான வனப்பகுதிகளை கொண்டது. நீலகிரி வடக்கு வனக்கோட்டத்துக்கு உட்பட்ட சிறியூர் வனப்பகுதியில் சிறுத்தைப்புலி, கரடி, காட்டெருமை, புலி, காட்டு யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. தற்போது வனப்பகுதிகளில் வறட்சி காரணமாக உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதால், வனவிலங்குகள் இடம்பெயர தொடங்கி உள்ளன.


இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி சிறியூர் வனப்பகுதியில் இருந்து ஒரு ஆண் காட்டு யானை உணவு தேடி உயரமான மலைப்பகுதி வழியாக ஊட்டி அருகே அணிக்கொரை கிராமத்தையொட்டி உள்ள வனப்பகுதிக்குள் புகுந்தது.

பின்னர் அந்த கிராமத்தில் உள்ள வெங்கடேஷ் என்பவரது தோட்டத்தில் பயிரிட்டு இருந்த கேரட் மற்றும் பீட்ரூட் பயிர்களை தின்றும், மிதித்தும் சேதப்படுத்தியது. இதனால் கேரட், பீட்ரூட் பயிர்கள் நாசமானது.

இதுகுறித்து விவசாயி வெங்கடேஷ் வனத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து வனச்சரகர் முத்துகிருஷ்ணன் தலைமையில், வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். காட்டு யானை அடர்ந்த புதர் நிறைந்த பகுதிக்குள் சென்றதால், அதனை விரட்ட முடியவில்லை.

இதையடுத்து அந்த யானை நேற்று முன்தினம் அணிக்கொரை அருகே உள்ள சோலாடா, எப்பநாடு, தங்காடு, சின்னகுன்னூர் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு இருந்தது. வனத்துறையினருடன் பொதுமக்களும் சேர்ந்து பட்டாசு வெடித்து காட்டு யானையை விரட்டினர். அப்போது காட்டு யானை திடீரென வனத்துறையினர் மற்றும் பொதுமக்களை துரத்தியது.

அதன் காரணமாக அவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர். அப்போது ஒரு நபரை காட்டு யானை தாக்க முயன்றதால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இரவு நேரம் ஆனதால், காட்டு யானையை விரட்டும் பணி கைவிடப் பட்டது.

அதனை தொடர்ந்து நேற்று வனத்துறையினர் குழுக்களாக பிரிந்து தொலைநோக்கி மூலம் காட்டு யானை நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். தங்காடு பகுதியில் காட்டு யானை நிற்பது தெரியவந்தது. உடனே வனத்துறையினர் அங்கு சென்று மதியம் 3 மணியளவில் சிறியூர் வனப்பகுதிக்குள் காட்டு யானையை விரட்டினர். வனப்பகுதியில் இருந்து கிராமப்புற பகுதிகளுக்கு வந்த காட்டு யானை தனக்கு தேவையான உணவை மட்டுமே தேடி சென்றது. மனிதர்களை ஒன்றும் செய்யவில்லை.

இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் தற்போது வெயில் அடித்து வருவதாலும், வனப்பகுதிகளில் வறட்சி நிலவுவதாலும், வனவிலங்களுக்கு உணவு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. எனவே, காட்டு யானை உணவு மற்றும் தண்ணீரை தேடி கிராமங்களுக்குள் புகுந்தது. குடியிருப்புகளுக்குள் யானை புகாமல், அதன் அருகே உள்ள வனப்பகுதிகளில் மட்டுமே 3 நாட்கள் முகாமிட்டு இருந்தது. முகாமிட்டு இருந்த யானை சிறியூர் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது, என்றனர்.