பெரம்பலூர் மாவட்டத்தில் ஜெயலலிதா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை


பெரம்பலூர் மாவட்டத்தில் ஜெயலலிதா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 26 Feb 2018 4:00 AM IST (Updated: 26 Feb 2018 2:37 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் மாவட்டத்தில் ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி ஜெயலலிதா சிலைக்கு அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் அரசு மருத்துவமனையில் பிறந்த 3 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டன.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. சார்பில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா விமரிசையாக நடந்தது. இதனை முன்னிட்டு பல்வேறு இடங்களில் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகள் ஆகியவை நடந்தது. முதலில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள ஜெயலலிதா, எம்.ஜி.ஆர்., அண்ணா ஆகியோரது சிலைகளுக்கு மாவட்ட செயலாளர் அரணாரை ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. தலைமையில், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர்ா கட்சி கொடி ஏற்றிவைத்து தொண்டர்களுக்கும், பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் சார்பில் மாவட்ட அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த 3 பச்சிளம் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது. மாவட்ட தொழில்நுட்ப பிரிவு சார்பில், துறைமங்கலத்தில் உள்ள அன்பகம் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளியிலும், வழக்கறிஞர் அணி சார்பில் ரோவர் சாலையில் உள்ள முதியோர் காப்பகத்தில் தங்கி உள்ள முதியோருக்கு உணவு வழங்கப்பட்டது. மேலும், துறைமங்கலம் டி.இ.எல்.சி. நடுநிலைப்பள்ளியில் பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளுக்கும் நோட்டு புத்தகம், கணித கருவிகள், எழுதுபொருட்கள் ஆகியவை வழங்கப்பட்டன. மேலும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சியில், பெரம்பலூர் எம்.எல்.ஏ. தமிழ்ச்செல்வன், மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் ராசாராம், நகர செயலாளர் ராஜபூபதி, ஒன்றிய செயலாளர்கள் மருதராஜா எம்.பி., புதுவேட்டக்குடி கிருஷ்ணசாமி, சிவப்பிரகாசம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள அனைத்து கிளைகளிலும் ஜெயலலிதா படத்திற்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து குன்னத்தில் அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதான நிகழ்ச்சிக்கு வேப்பூர் ஒன்றிய செயலாளர் புதுவேட்டக்குடி கிருஷ்ணசாமி தலைமை தாங்கினார். ராமச்சந்திரன் எம்.எல்.ஏ. அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இதில் குன்னம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க தலைவர் குணசீலன், மாவட்ட குன்னம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், பிரதிநிதி சித்தளி ராஜா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கீழப்புலியூர் செல்வராஜ் மற்றும் குன்னம் கிளை செயலாளர் மதியழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story