எச்.ராஜாவை கண்டித்து சாலை மறியல்-ஆர்ப்பாட்டம்


எச்.ராஜாவை கண்டித்து சாலை மறியல்-ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 8 March 2018 11:00 PM GMT (Updated: 8 March 2018 7:03 PM GMT)

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் எச்.ராஜாவை கண்டித்து வக்கீல்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் புரட்சி பாரதம் கட்சியினர் சாலை மறியல், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலந்தூர்,

தந்தை பெரியார் சிலை குறித்து கருத்து தெரிவித்த பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜாவை கண்டித்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வக்கீல்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலந்தூர் நீதிமன்ற வக்கீல்கள் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆலந்தூர் நீதிமன்றத்தில் இருந்து ஊர்வலமாக பரங்கிமலை ஜி.எஸ்.டி. சாலைக்கு சென்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் மோகன்தாஸ் மற்றும் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்ட வக்கீல்கள்களை சமரசம் செய்து கலைந்து போக செய்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

திருவொற்றியூர் பெரியார் நகரில் உள்ள பெரியார் சிலை முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் அன்புச்செழியன் தலைமையில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது எச்.ராஜாவுக்கு எதிராக கோஷமிட்டு அவரது உருவபடம் மற்றும் பா.ஜ.க. கொடியை தீ வைத்து எரித்தனர்.

இதில் புரட்சிபாரதம் கட்சி மாவட்ட தலைவர் சுரேஷ், மாநில செயலாளர் ஸ்டெல்லாமேரி, திராவிடர் விடுதலை கழகம், தந்தை பெரியார் கழகத்தைச்சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். மறியலில் ஈடுபட்ட 50-க்கும் மேற்பட்டோரை திருவொற்றியூர் போலீசார் கைது செய்தனர்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள அம்பேத்கர் பாலம் அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 125-வது வட்ட செயலாளர் சுரேஷ் தலைமையில் செய்தி தொடர்பாளர் பகலவன், பகுதி துணை செயலாளர் தலித் கமல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அதேபோல் சென்னை காமராஜர் சாலையில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே புரட்சி பாரதம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மறியலில் ஈடுபட முயன்ற அக்கட்சியினர் 24 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story