ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தே.மு.தி.க. தலைமை செயலாளர் கோர்ட்டில் ஆஜர்


ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தே.மு.தி.க. தலைமை செயலாளர் கோர்ட்டில் ஆஜர்
x
தினத்தந்தி 9 March 2018 4:30 AM IST (Updated: 9 March 2018 3:04 AM IST)
t-max-icont-min-icon

ஜெயலலிதாவை பற்றி அவதூறு பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி தஞ்சை கோர்ட்டில் ஆஜரானார். மேலும் விஜயகாந்த் மீதான விசாரணை அடுத்த மாதம்(ஏப்ரல்) 10-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

தஞ்சாவூர்,

தஞ்சையில் கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி தே.மு.தி.க. சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் தமிழக அரசையும், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவையும் அவதூறாக பேசியதாக தஞ்சை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதேபோல் தஞ்சை மாவட்டம் கபிஸ்தலத்தில் 2013-ம் ஆண்டு நடந்த பொதுக்கூட்டத்தில் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக தே.மு.தி.க. தலைமை நிலைய செயலாளர் பார்த்தசாரதி, தே.மு.தி.க. பேச்சாளர் ஜெயகுமார் ஆகியோர் மீதும் வழக்கு தொடரப்பட்டது. இந்த 2 வழக்குகளும் நேற்று நீதிபதி நக்கீரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் ஆஜராவதில் இருந்து விஜயகாந்த் விலக்கு பெற்றுள்ளதால் விசாரணை அடுத்த மாதம்(ஏப்ரல்) 10-ந் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.

பார்த்தசாரதி கோர்ட்டில் ஆஜரானார். தே.மு.தி.க. பேச்சாளர் ஜெயகுமார் மீது பிடிவாரண்டு உள்ளது. அவர் ஆஜராகாததால் விசாரணையை அடுத்த மாதம் 10-ந் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார். இந்த வழக்குகளில் தே.மு.தி.க. வக்கீல்கள் மாதவன், செந்தில்குமார் ஆகியோர் ஆஜரானார்கள்.

பின்னர் கோர்ட்டு வளாகத்தில் பார்த்தசாரதி நிருபர்களிடம் கூறுகையில், “தமிழகத்தில் பெரியார் சிலைகளை உடைப்போம் என்று பா.ஜ.க.வை சேர்ந்த எச்.ராஜா கூறியிருப்பது கண்டிக்கத்தக்கது. தமிழக மக்கள் அதிகம் நேசிக்கும் தலைவர்களுள் பெரியாரும் ஒருவர். ஒடுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட, பெண்களின் உரிமைகளுக்காக பாடுபட்டவர் பெரியார். இது போன்ற சச்சரவுகளை ஏற்படுத்தும் கருத்து தெரிவிப்பதை பா.ஜ.க.வினர் கைவிட வேண்டும்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதை திசைதிருப்பும் நோக்கத்தில் எச்.ராஜா இவ்வாறு கூறி உள்ளார். இனிமேல் இதுபோன்று எந்த தலைவரையும் யாரும் இழிவுபடுத்தி பேசக்கூடாது. திருச்சி திருவெறும்பூரில் இருசக்கர வாகனத்தை எட்டி உதைத்ததில் கர்ப்பிணி பெண் உஷா கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இதற்கு காரணமான போலீஸ் இன்ஸ்பெக்டர் காமராஜ் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story