திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் குட்டி குடித்தல் நிகழ்ச்சி


திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் குட்டி குடித்தல் நிகழ்ச்சி
x
தினத்தந்தி 9 March 2018 4:00 AM IST (Updated: 9 March 2018 3:07 AM IST)
t-max-icont-min-icon

திருச்சி புத்தூர் குழுமாயி அம்மன் கோவிலில் குட்டி குடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

திருச்சி,

திருச்சி வயலூர் சாலை உய்யகொண்டான் வாய்க்கால் கரையோரம் காவல் தெய்வமாக விளங்கி வரும் புத்தூர் குழுமாயி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இந்த கோவில் விழா ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதத்தில் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த மாதம் (பிப்ரவரி) 26-ந்தேதி இரவு காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து கடந்த 6-ந்தேதி (செவ்வாய்க் கிழமை) காளியாவிட்டம் நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குட்டி குடித்தல் நிகழ்ச்சி நேற்று புத்தூர் மந்தையில் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலையில் இருந்தே பக்தர்கள் நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக ஆட்டுக்குட்டிகளை பிடித்துக்கொண்டு வரத்தொடங்கினர். நேரம் ஆக, ஆக ஏராளமான பக்தர்கள் ஆடுகளுடன் குவிந்தனர். பின்னர் காலை 10 மணி அளவில் குட்டி குடித்தல் நிகழ்ச்சி தொடங்கியது. அப்போது பக்தர்கள் நேர்த்திக்கடனாக கொண்டு வந்த ஆடுகளின் ரத்தத்தை மருளாளி சிவக்குமார் உறிஞ்சி குடித்தார். தொடர்ந்து பக்தர் களுக்கு அருள்வாக்கு கூறினார். நேற்று ஆயிரக் கணக்கான பக்தர்கள் ஆட்டுக்குட்டிகளை கொண்டு வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மருளாளி ஆட்டுக்குட்டிகளின் ரத்தத்தை உறிஞ்சும் போது பக்தர்கள் அம்மனை நினைத்து வழிபட்ட வண்ணம் இருந்தனர்.முன்னதாக ஓலைப்பிடாரியாக அலங் கரிக்கப்பட்ட சப்பரத்தில் அம்மனை வைத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக குட்டி குடித்தல் விழா நடந்த மந்தைக்கு அழைத்து வந்தனர். விழாவை முன்னிட்டு புத்தூர் 4 ரோடு முதல் கோவில் வரை சாலையின் இரு புறமும் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் நீர் மோர் வழங்கப்பட்டது. இன்று (வெள்ளிக்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. நாளை (சனிக்கிழமை) அம்மன் குடிபுகுதல் நடக்கிறது. இந்த குட்டி குடித்தல் நிகழ்ச்சியை காண திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங் களில் இருந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவை முன்னிட்டு கோவில் வளாகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

குட்டி குடி திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் கோவிலை சுற்றி பக்தர்களை வரவேற்கும் விதமாக விளம்பர பதாகைகள் வைக்கப்படும். இந்த ஆண்டு போலீசார் அனுமதி மறுத்ததால் வரவேற்பு மற்றும் விளம்பர பதாகைகள் கோவில் வளாகத்தில் வைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

Next Story