திருக்கனூர் அருகே பரபரப்பு: 5-ம் வகுப்பு மாணவனை பள்ளிக்குள் வைத்து பூட்டிச் சென்ற ஆசிரியர்


திருக்கனூர் அருகே பரபரப்பு: 5-ம் வகுப்பு மாணவனை பள்ளிக்குள் வைத்து  பூட்டிச் சென்ற ஆசிரியர்
x
தினத்தந்தி 14 March 2018 11:30 PM GMT (Updated: 14 March 2018 8:33 PM GMT)

திருக்கனூர் அருகே 5-ம் வகுப்பு மாணவனை பள்ளிக்குள் வைத்து ஆசிரியர் பூட்டிச்சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வகுப்பறையில் அந்த மாணவன் தூங்கியதால் இந்த பரபரப்பு சம்பவம் நடந்துள்ளது.

திருக்கனூர்,

புதுவை மாநிலம் திருக்கனூர் அருகே உள்ள பி.எஸ்.பாளையம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுப்பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படிக்கின்றனர். மாலை 4 மணியளவில் பள்ளி முடிந்து, மாணவர்கள் வீடுகளுக்கு புறப்பட்டுச் சென்றதும் வழக்கம்போல் பள்ளிக்கூடத்தை ஆசிரியர் பூட்டிவிட்டுச் சென்றார்.

இந்த பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்த அருகில் உள்ள இருளர்குடியிருப்பை சேர்ந்த செல்லப்பன் மகன் வேல்முருகன் (வயது 10) என்ற மாணவன் மட்டும் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவனது பெற்றோர் பல இடங்களில் வேல்முருகனை தேடிப்பார்த்தனர். ஆனால் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில் வகுப்பறையில் தூங்கிய வேல்முருகன் திடீரென்று மாலை 5.30 மணியளவில் எழுந்தான். அப்போது, பள்ளிக்கூடத்தில் யாருமே இல்லாமல் இருந்ததையும் கதவு பூட்டிக் கிடந்ததையும் கண்டு திடுக்கிட்டான். என்ன செய்வது என்று தெரியாமல் உதவி கேட்டு பள்ளிக்கூடத்துக்குள்ளேயே அங்கும் இங்கும் ஓடி தவித்தான். அப்போதும் அவனுக்கு உதவி கிடைக்கவில்லை.

இதனால் பள்ளியின் நுழைவு வாயிலில் உள்ள இரும்புக் கதவில் ஏறி உதவி கேட்டு கதறினான். அவனது சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள், திருபுவனை போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரியா மற்றும் போலீசார் பள்ளிக் கூடத்துக்கு விரைந்து வந்தனர். பள்ளிக்கூட கதவை உடைத்து உள்ளே சென்று மாணவன் வேல்முருகனை மீட்டனர்.

மாணவன் கண்டுபிடிக்கப்பட்டது குறித்து அவனது பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் அங்கு விரைந்து வந்து வேல்முருகனை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தனர். இதன்பின் அவனை அங்கிருந்து அவர்கள் அழைத்துச் சென்றனர்.

இதுகுறித்து விசாரித்ததில், வகுப்பறையில் மாணவன் வேல்முருகன் தூங்கியது தெரியாமல் பள்ளிக்கூடத்தை ஆசிரியர் வழக்கம்போல் பூட்டி விட்டுச்சென்றதால் நடந்த இந்த சம்பவம் பி.எஸ்.பாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மாலை நேரத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டதால் மாணவனை மீட்பதில் சிக்கல் இல்லாமல் போனது. இரவு நேரமாகி இருந்தால் நிலைமை மோசமாகி மேலும் பரபரப்பு அதிகரித்து இருக்கும் என்று அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக மாணவர்களின் பெற்றோர் கூறுகையில், ‘பள்ளிக்கு ஆசிரியர்கள் சரியாக வருவதில்லை. மாணவர்களுக்கு முறையாக பாடம் கற்றுத் தருவதில்லை. வகுப்பறையில் மாணவன் இருப்பது தெரியாமல் பள்ளியை பூட்டி விட்டுச்சென்ற ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த பள்ளியின் செயல்பாடுகள் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்றனர்.

Next Story