காட்டுத்தீ உருவாகுவது எப்படி?


காட்டுத்தீ உருவாகுவது எப்படி?
x
தினத்தந்தி 18 March 2018 5:45 AM GMT (Updated: 18 March 2018 5:54 AM GMT)

காட்டுத் தீ என்பது முன்பு வரை ஒரு சாதாரண வார்த்தையாக தான் இருந்தது. ஆனால் தேனி மாவட்டம் குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட நிகழ்வுக்குப்பின் காட்டுத் தீ என்பது நம்மை கலங்க வைக்கும் வார்த்தையாக மாறிப்போனது.

காட்டுத்தீக்கு இப்படியொரு கோர முகம் இருப்பதை குரங்கணி விபத்து நமக்கு காட்டி இருக்கிறது. மக்கள் அனைவரின் கண்களிலும் ரத்தக் கண்ணீர் வழிந்தோடும் அளவுக்கு மனித உயிர்களோடு கொடூரமான முறையில் ஒரு யுத்தம் நடத்தி சென்றிருக்கிறது இந்த காட்டுத்தீ. இது நேர்ந்து இருக்கக்கூடாது, இனி நேரவும் கூடாது என்பதுதான் நம் வேண்டுதலாக இந்த வேளையில் இருக்கிறது.

இத்தகைய காட்டுத்தீ எப்படி ஏற்படுகிறது? என்பதை நாம் அறிந்துகொள்வது அவசியம். பொதுவாக இரண்டு காரணங்களால் காட்டுத்தீ நிகழ்கிறது. ஒன்று இயற்கையாக ஏற்படுவது, மற்றொன்று மனிதர்களின் தவறுகளால் ஏற்படுவது. இதில் மனிதர்களால் ஏற்படும் காட்டுத் தீ பேராபத்தை பரிசளிக்க வல்லது.

இயற்கையாக எவ்வாறு காட்டுத் தீ ஏற்படும் என்ற கேள்வி நம்மில் பலருக்கும் உண்டு. தீ உருவாக மூன்று காரணிகள் அவசியம். வெப்பம், ஆக்சிஜன் மற்றும் எரிவாயு ஆகிய மூன்றும் தீயின் மூலப்பொருட்கள் ஆகும். காட்டில் உள்ள மரங்கள் 150 டிகிரிக்கு மேல் வெப்பம் அடையும்போது மரங்களில் இருந்து புகை வெளியேறுகிறது. புகையில் உள்ள ஹைட்ரோகார்பன் காற்றில் உள்ள ஆக்சிஜனுடன் இணைவதால் தீ ஏற்படுகிறது.

மேலும் மரத்தில் உள்ள மரத்துகள்கள் காய்ந்த இலைகளில் விழுந்து சூரியனால் வெப்பமடைந்து நெருப்பு கங்குகள் உருவாகி காற்றில் பரவி காட்டுத் தீ ஏற்படுகிறது. இது தவிர காடுகளில் மின்னல் தாக்கும் போதும் காட்டுத் தீ ஏற்படுகிறது. அறிவியல் அடிப்படையில் காட்டுத் தீயானது மணிக்கு 30 கிலோமீட்டர் வேகத்தில் பரவும் என நம்பப்படுகிறது.

காற்று எந்த திசையில் வீசுகிறதோ அந்த திசையில்தான் காட்டுத்தீயும் பரவும். காட்டுத் தீயினை மூன்று வகையாக பிரிக்கலாம். முதலாவது தரையில் ஏற்படும் தீ (கிரவுண்ட் பயர்). இந்த வகை காட்டுத்தீயானது தரையில் உள்ள புற்களில் மட்டும் ஏற்படும். இதில் தீயின் அளவு குறைவாகவும், புகையின் அளவு அதிகமாகவும் காணப்படும்.

இரண்டாவதாக செடி, கொடிகளில் ஏற்படும் தீ (சர்பேஸ் பயர்). இதில் தீயின் அளவு தரையில் இருந்து 1½ மீட்டர் உயரம் வரை எழும்பும் உரிய நேரத்தில் தீயை அணைக்காத பட்சத்தில் மிகப்பெரிய காட்டுத்தீயாக மாற வாய்ப்பு உள்ளது.

கடைசியாக “கிரவுண் பயர்”. இது காட்டுத் தீயின் மிகவும் மோசமான நிலை ஆகும். உயரமான மரத்தின் உச்சிமுதல் அடிப்பகுதி வரை தீயினால் கொழுந்துவிட்டு எரியும் நிலை. ஒருமரத்தில் இருந்து அடுத்த மரத்திற்கு தீ பரவி விரைவில் காட்டையே முழுமையாக அழிக்கும் சக்தி கொண்டது.

இவையனைத்தும் இயற்கையாகவே ஏற்படும் காட்டுத் தீயாகும். இது தவிர சில சமயங்களில் மனிதர்களின் தவறான செயல்களினால் காட்டுத் தீ ஏற்படுகிறது. மலைப்பகுதிக்கு மலையேற்ற பயிற்சிக்கு செல்லும் சாகச பிரியர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் காடுகளில் கூடாரம் அமைத்து தீ மூட்டுவது, சமைத்துவிட்டு தீயினை முழுவதுமாக அணைக்காமல் கவனக்குறைவாக சென்றுவிடுவது, வனப்பகுதியில் புகை பிடிப்பது போன்றவற்றினாலும் காட்டுத் தீ ஏற்படுகிறது.

உலக அளவில் மேற்கு அமெரிக்கா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் தான் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுகிறது. இந்தியாவில் வருடத்திற்கு அதிகபட்சமாக அசாம், மேகாலயா, மணிப்பூர் பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படுகிறது. ஒடிசா, இமாச்சல பிரதேசம் மற்றும் தமிழக பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைகளிலும் அவ்வப்போது காட்டுத்தீ ஏற்படுகிறது.

எப்போதுமே, மலைப்பகுதிகளுக்கு மலையேற்ற பயிற்சிக்கு செல்பவர்கள் மற்றும் சுற்றுலாப்பயணிகள் சரியான காலநிலையினை அறிந்து முன்னெச்சரிக்கையாக செயல்பட்டு பாதுகாப்பாக திரும்ப வேண்டும். காட்டின் சூழ்நிலையினை அறிந்து அதன்பின்னர் மலையேற்ற பயிற்சிக்கு செல்வது சாலச்சிறந்தது.

-பாளை தேவா

Next Story